தாம்பரம்: சாலையில் கருங்கல் ஏற்றி சென்ற லாரியின், பின்பக்க டயர் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்ததில், அதன் அருகே பைக்கில் சென்ற மணிமங்கலம் எஸ்.ஐ., நீலகண்டன், 52, பலத்த காயமடைந்தார். குற்றவாளியின் ஆவணங்களை மாஜிஸ்திரேட்டின் வீட்டில் சமர்ப்பிக்க செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டது. மணிமங்கலம் காவல் நிலைய எல்லையில், ஆட்டோ திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி, நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். மணிமங்கலம் போலீசார், குற்றவாளியை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்துவதற்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். மணிமங்கலம் குற்றப்பிரிவு எஸ்.ஐ., நீலகண்டன், 52. தன் இருசக்கர வாகனத்தில், பம்மல், நாகல்கேணியில் உள்ள மாஜிஸ்திரேட்டின் வீட்டிற்கு, குற்றவாளியின் ஆவணங்களுடன் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தார். சென்னை புறவழிச்சாலை அணுகு சாலையில், கிஷ்கிந்தா சாலை சந்திப்பு அருகே சென்றபோது, அவ்வழியாக கருங்கல் ஏற்றி சென்ற லாரியின் பின்பக்க டயர், திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அப்போது, பக்கவாட்டில் சென்ற எஸ்.ஐ., நீலகண்டன் நிலைதடுமாறி வாகனத்துடன் கீழே விழுந்தார். இதில், அவரது கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இருப்பினும், காயங்களுடன் மாஜிஸ்திரேட் வீட்டிற்கு சென்று தன் பணியை முடித்துவிட்டு, முடிச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.