மனைவி குடும்பத்தினர் முன் கணவரை அடித்த பெண் ஆய்வாளருக்கு அபராதம்
சென்னை :மனைவி குடும்பத்தினர் முன் கணவரை அடித்து அவமானப்படுத்திய பெண் ஆய்வாளருக்கு 50,000 ரூபாய் அபராதம் விதித்து, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, அனகாபுத்துார், காமராஜபுரத்தைச் சேர்ந்த சகாய பிரவீன் என்பவர், மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:கடந்த, 2018 ஜன., 18ல், மேரி மெர்சி என்பவரை, திருமணம் செய்து கொண்டேன். குடும்ப பிரச்னையால் மனைவியை பிரிந்து வாழ்கிறேன்.என் மனைவியின் உறவினரும், செங்கல்பட்டு நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டருமான ஆண்டனி ஸ்டாலின் துாண்டுதலில், 2020 ஜன., 2ம் தேதி, தாம்பரம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி, என்னையும், என் குடும்பத்தினரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்தார். அப்போது, என் வீட்டுச் சாவியை வலுக்கட்டாயமாகப் பறித்து, என் மனைவியிடம் கொடுத்தார். அந்த வீடு என் அம்மா பெயரில் உள்ளது.சாவியை கொடுக்க மறுத்ததால், மனைவி குடும்பத்தினர் முன் என்னை அடித்து, தரையில் உட்கார வைத்து, இன்ஸ்பெக்டர் சுமதி அவமானப்படுத்தினார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனுவை, நேற்று முன்தினம் விசாரித்த, ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், ''மனைவி குடும்பத்தினர் முன், சகாய பிரவீனை அடித்து அவமானப்படுத்தி, ஆய்வாளர் சுமதி மனித உரிமை மீறலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.''எனவே, பாதிக்கப்பட்ட சகாய பிரவீனுக்கு தமிழக அரசு, 50,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இத்தொகையை, ஆய்வாளர் சுமதியிடம் வசூலித்துக் கொள்ளலாம். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, உத்தரவிட்டார்.