உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பேப்பர் ரோல் கிடங்கில் தீ விபத்து ரூ.பல லட்சம் பொருட்கள் சேதம்

பேப்பர் ரோல் கிடங்கில் தீ விபத்து ரூ.பல லட்சம் பொருட்கள் சேதம்

திருவொற்றியூர்:திருவொற்றியூர், துளசிராம் நகரில், 'வைகுண்ட செல்வம் என்டர்பிரைசஸ்' என்ற பெயரில், பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான பேப்பர் ரோல் கிடங்கு உள்ளது.இதே வளாகத்தில், பழைய கார்களின் உதிரிபாகங்களை பிரித்து, விற்பனை செய்யும் பணியும் மேற்கொள்வதாக தெரிகிறது. இந்த நிலையில், நேற்று மதியம் 1:00 மணிக்கு, இந்த கிடங்கில் இருந்து குபுகுபுவென கரும்புகை கிளம்பியது.சுதாரித்த அக்கம் பக்கத்தினர், தீயணைப்பு துறை மற்றும் திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு, தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் தென்னரசு, உதவி மாவட்ட அலுவலர் மாரியப்பன் ஆகியோர் தலைமையில், மணலி, எண்ணுார், திருவொற்றியூர், அம்பத்துார் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து, 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.மேலும், 30க்கும் மேற்பட்ட குடிநீர் லாரிகளும் பயன்படுத்தப்பட்டன. இதில், 60க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர்.இருப்பினும், 5,000 சதுர அடிக்கும் அதிகமான இடத்தில், டன் கணக்கில் வைக்கப்பட்டிருந்த பேப்பர் ரோல்கள், பிளாஸ்டிக் மற்றும் பழைய கார்களால் தீ கட்டுக்குள் வரவில்லை. அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாயின. இரவு வரை தீயை அணைக்கும் பணி தொடர்ந்தது. விடுமுறை காரணமாக, கிடங்கு மூடப்பட்டிருந்ததால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. மின் கசிவு காரணமாக, தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, போலீசார் கூறுகின்றனர்.இந்த விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையானதாக கூறப்படுகிறது. திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.இந்த தீ விபத்தால், சுற்றுவட்டார மக்கள் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகளால் அவதிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை