உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் தீ விபத்து: 5 மணி நேரம் போராடி அணைத்த வீரர்கள்

 பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் தீ விபத்து: 5 மணி நேரம் போராடி அணைத்த வீரர்கள்

சென்னை: அண்ணாசாலையில் உள்ள பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில், நேற்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் ஐந்து மணி நேரம் போராடி, தீயை கட்டுப்படுத்தினர். சென்னை அண்ணாசாலையில், பி.எஸ்.என்.எல்., மத்திய மண்டல அலுவலகம் உள்ளது. எட்டு மாடிகள் கொண்ட இந்த கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் நேற்று காலை, 9:15 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்து மற்ற பகுதிகளுக்கும் தீ பரவியது. தகவல் கிடைத்ததும், திருவல்லிக்கேணி, எழும்பூர், கீழ்ப்பாக்கம், வேப்பேரி உள்ளிட்ட, எட்டு இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வந்தன. இவற்றை பயன்படுத்தி, 150க்கும் மேற்பட்ட வீரர்கள் குவிந்தனர். அலுவலகம் துவங்கும் நேரத்திற்கு முன் தீ விபத்து ஏற்பட்டதால், சில ஊழியர்களே பணிக்கு வந்திருந்தனர். ஆறாவது தளத்தில் சிக்கியிருந்த ஊழியர்களை பத்திரமாக மீட்டனர். தீ அடுத்தடுத்து, 3, 4, 5 வது தளங்களுக்கும் பரவியது. 'ஸ்கை லிப்ட்' உள்ளிட்ட தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன், தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர். இரண்டாம் தளத்தில் பேட்டரிகள், வடங்கள், 'ஏசி' உள்ளிட்ட மின் சாதன பொருட்கள் முழுமையாக எரிந்தன. இதனால், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், புகை வெளியேறிக் கொண்டே இருந்தது. ஐந்து மணி நேர போராட்டத்திற்கு பிறகு முழுமையாக தீ அணைக்கப்பட்டது. மின்கசிவு காரணமா அல்லது பேட்டரி வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதா என, தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.

இணையதள சேவைகள் முடக்கம்

இந்த தீ விபத்தால் மின்வாரியம், தமிழக டி.ஜி.பி., அலுவலகம், கமிஷனர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் இணையதள சேவை பாதிக்கப்பட்டது. அவற்றின் இணைய தளங்களில், 'தொழில்நுட்பட காரணங்களால் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் சேவை வழங்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. மின் இணைப்பு பெறுதல், பெயர் மாற்றம், கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட மின்வாரியத்தின் எந்த சேவைகளையும் பெற முடியாமல், பலரும் பாதிக்கப்பட்டனர். மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மின் வாரிய சேவைகளுக்கான தொலைத்தொடர்பு வசதி, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் வாயிலாக பெறப்பட்டுள்ளது. அந்நிறுவன அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், மின் வாரிய சேவைகள் பாதிக்கப்பட்டன' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ