உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மீன்பிடி துறைமுக பணி மந்தமாக நடப்பதால் மீனவர்கள் அதிருப்தி

மீன்பிடி துறைமுக பணி மந்தமாக நடப்பதால் மீனவர்கள் அதிருப்தி

சென்னை :காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை, 97 கோடியில் மேம்படுத்தும் பணிகளை துவக்கி ஓராண்டாகியும், 25 சதவீத பணிகள் கூட முடியாததால், மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மீன்பிடி தடை காலத்தில், மீன் விற்பனை தளங்களில் மேற்கூரையாவது அமைத்திருக்கலாம்; அதைக்கூட அதிகாரிகள் கவனிக்கவில்லை எனவும் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகம், 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 23 மீனவ கிராமங்களை சேர்ந்த, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. தினமும், 200 டன் மீன் வகைகள் கையாளப்படுகின்றன.இங்கிருந்து பிற மாநிலங்கள் மட்டுமல்லாமல், துபாய், சிங்கப்பூர், மலேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் மீன் வகைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.பல கோடி ரூபாய் அன்னிய செலவாணி ஈட்டி தரும் காசிமேடு மீன்பிடி துறைமுகம், சுகாதார சீர்கேடுடன் காட்சியளிக்கிறது.படகுகளை நிறுத்துவதில் போதிய இடம் இல்லாதது, பெரும் பிரச்னையை ஏற்படுத்தி வருகிறது. அதனால், காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தை அனைத்து வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும் என மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, மத்திய - மாநில அரசுகள் பங்களிப்புடன், 150 கோடி ரூபாயில், காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தை நவீனப்படுத்த திட்டமிடப்பட்டது.அதன்படி, கப்பல் லிப்ட் வசதி, படகு பழுது பார்க்கும் கூடம், புதிய சுகாதார வளாகங்கள் அமைப்பது, திட - திரவ கழிவு மேலாண்மை அமைப்பு வசதிகள், மீன் விற்பனை, மீன்பிடி தொழில் சார்ந்த வேலைகள் மற்றும் மீன் பதப்படுத்துதல் உள்ளிட்ட, 22 பணிகளுக்கு, 2022ல் அடிக்கல் நாட்டப்பட்டது.ஆனால், கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி வழங்கப்படவில்லை எனக்கூறி வழக்கு தொடரப்பட்ட நிலையில், பணிகள் கிடப்பில் போடப்பட்டது.பின், 2024, ஜூனில் மீண்டும் பணிகள் துவங்கி நடந்து வரும் நிலையில், ஓராண்டாகியும் துறைமுக பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதாகவும், 25 சதவீத பணிகள் கூட முடியாததால் மீன் விற்பனை பாதிக்கப்படுவதாகவும், மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட மீனவர் நலச்சங்க தலைவர் கே.குப்பன் கூறியதாவது:காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை, 97 கோடி ரூபாயில் நவீனப்படுத்தும் பணி, மூன்று ஆண்டுகளாகியும் 25 சதவீதம் கூட முடிவடையவில்லை.புதிய வார்ப்பு தளத்தில், 200 மீட்டருக்கு கூரை அமைக்கும் பணிகளில், புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல், கடலில் 100 அடி ஆழத்திற்கு போர்வெல் அமைக்க, பழைய முறையை பயன்படுத்துகின்றனர்.தினமும் மூன்று தொழிலாளர்கள், இரண்டு மணி நேரம் மட்டுமே வேலை செய்கின்றனர். ஆமை வேகத்தில் நடக்கும் பணியால், 40 சதவீதம் கூட கூரை அமைக்கும் பணி முடியவில்லை.மீன்பிடி தடை காலத்தை பயன்படுத்தி, கூரை அமைக்கும் பணிகளை முழுமையாக முடிந்திருக்கலாம். இப்பணிக்காக, வார்ப்பு தளத்தில் பல இடங்களில் அபாயகரமான பள்ளங்கள் போடப்பட்டுள்ளன.வரும் ஜூன் 14ம் தேதியோடு மீன்பிடி தடைக்காலம் முடிகிறது. மொத்த, சில்லரை வியாபாரிகள் வார்ப்பு தளத்தில் அதிகாலையில் நடக்கும் மீன் ஏலத்திற்கு வருவர்.இப்பள்ளங்களில் பெரியளவிலான விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்த பள்ளங்களை விரைந்து மூட வேண்டும் என, துறைமுக அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளோம். பணிகளை விரைந்து முடிக்காவிட்டால், மீனவர்களை ஒன்றிணைத்து மாபெரும் போராட்டம் நடத்துவோம்.இவ்வாறு அவர் கூறினார்.தன்னிச்சையாக செயல்பாடுமீனவர்கள் கூறிய கருத்துகளை புறம்தள்ளி, அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். கால அளவீடு இன்றி பணி செய்கின்றனர். மீன்பிடி தடை காலத்தில், புதிய வார்ப்பு தளத்தில், 200 மீட்டர் கூரை அமைக்கும் பணிகளை செய்திருக்கலாம்; மீனவர்களுக்கு இடையூறு ஏற்பட்டிருக்காது. மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.- நாஞ்சில் ரவி அனைத்து மீனவர் சங்க தலைவர்ஆறு மாதத்தில் முடியும்காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை நவீனப்படுத்தும் பணி, 150 கோடியில் நடக்கும் என தமிழக அரசு அறிவித்தது. பின், 97.75 கோடியாக குறைக்கப்பட்டு, பணி நடக்கிறது. கடற்கரையில் நடக்கும் பணி என்பதால், பல்வேறு தொழில்நுட்ப காரணங்களால் கூரை அமைக்கும் பணி தாமதமாகிறது. ஆறு மாதங்களில் கூரை அமைக்கும் பணி முடிந்துவிடும்.- மீன்வளத் துறை அதிகாரிகள்ஒப்பந்ததாரருக்கேபயன் கிடைக்கும்மீன்பிடி துறைமுக மேம்பாட்டு பணியால், மீனவர்கள் பயன்பெற போவதில்லை; ஒப்பந்ததாரர்கள் மட்டுமே பயன்பெறுவர். நுழைவாயில் அமைப்பதால், மீனவர்கள் கட்டணம் செலுத்தி, துறைமுகத்தை பயன்படுத்தும் நிலை ஏற்படும். துறைமுகத்தில் என்ன பணி நடக்கிறது என்பது குறித்த வரைபடம் எங்கும் வைக்கப்படவில்லை. திட்டம் எந்த வடிவத்தில் இருக்கும் என்பதை, பாமர மீனவர்கள் எப்படி ஆன்லைனில் சென்று பார்க்க முடியும்.- வே.சங்கர்மீனவ மக்கள் முன்னணி தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை