உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாரிய குடியிருப்புகளை சீரமைக்காததால் மறியல்: போலீசார் முன் இருதரப்பு மீனவர்கள் கைகலப்பு

வாரிய குடியிருப்புகளை சீரமைக்காததால் மறியல்: போலீசார் முன் இருதரப்பு மீனவர்கள் கைகலப்பு

திருவொற்றியூர், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை சீரமைத்து தரக்கோரி, திருச்சிணாங்குப்பம் மீனவர்கள் மறியலில் ஈடுபட்டதால், எண்ணுார் விரைவு சாலையில், இரண்டு மணி நேரம் போக்குவரத்து முடங்கியது. போலீஸ் துணை கமிஷனர் பாஸ்கரன் முன்னிலையில், இரு தரப்பினர் அடிதடி மோதலில் ஈடுபட்டதால், உச்சகட்ட பதற்றம் நிலவியது.திருவொற்றியூர், 14வது வார்டில், திருச்சிணாங்குப்பம் மீனவ குடிசை பகுதி இருந்தது. இந்த குடிசைகள், 2015ல் அகற்றப்பட்டு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட முடிவானது. அதன்படி, 2019ம் ஆண்டு, 35.63 கோடி ரூபாய் செலவில், தளம் ஒன்றிற்கு 20 வீடுகள் வீதம், ஒரு திட்ட பகுதியில், 120 வீடுகள் என, 360 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. இதை, கடந்தாண்டு ஜூலையில், முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திறந்து வைத்தார்.இதில், 352 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள், பயனாளி பங்கீட்டு தொகையாக தலா, 2.40 லட்சம் ரூபாய் செலுத்த கோரப்பட்டது.

இரண்டு மணி நேரம்

அதன்படி, 50,000 ரூபாய் முன்பணத்தை பயனாளிகள் கட்டியுள்ளனர். மீதமுள்ள, 1.90 லட்சம் ரூபாய் தொகையை, வட்டியில்லாமல் கட்ட அனுமதி கோரி, மார்ச், 25ம் தேதி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.திறப்பு விழா கண்டு ஓராண்டாகும் நிலையில், குடியிருப்புகள் முறையாக ஒதுக்காததால், 'குடி'மகன் மற்றும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.வீட்டின் கதவு, ஜன்னல்கள் உடைந்து விட்டன. சில கட்டடங்களில் சிமென்ட் பூச்சு உதிர்ந்து, கம்பிகள் துருப்பிடித்து உள்ளன. இவற்றை சீரமைத்து, குடியிருப்புகளை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என, மீனவர்கள் வலியுறுத்தினர். இதுவரை, அதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்கவில்லை.இந்நிலையில், 61 நாட்களுக்கான மீன்பிடித் தடைக்காலம் துவங்கியுள்ளதால், மீன்பிடி தொழில் முடங்கியுள்ளது. இதனால், தற்போது வசிக்கும் வீடுகளுக்கு மாத வாடகை செலுத்த முடியவில்லை.அதனால், ஒதுக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து, வீடு ஒப்படைக்க வேண்டும் எனக்கூறி, திருவொற்றியூர், திருச்சிணாங்குப்பம் - எண்ணுார் விரைவு சாலை சந்திப்பில், மீனவர்கள் நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர்.இதில், 500க்கும் அதிகமான மீனவர்கள் பங்கேற்றதால், முன்னெச்சரிக்கையாக போலீசாரும் குவிக்கப்பட்டனர். வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் பாஸ்கரன், மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தினார். இரண்டு மணி நேரம் மறியல் தொடர்ந்ததால், எண்ணுார் விரைவு சாலையில், பல கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மாநகர பேருந்துகளில் பயணித்தோர், சாலையில் இறங்கி நடந்தே சென்றனர்.

பரபரப்பு

மறியல் தொடரவே, வாரிய அதிகாரிகளிடம் பேசி, பிரச்னைக்கு அடுத்த வாரம் தீர்வு காண முயல்வதாக, துணை கமிஷனர் உறுதி அளித்தார்.தொடர்ந்து, ஒரு தரப்பினர் கலைந்து சென்றனர்; மற்றொரு தரப்பினர் மறியலை தொடர்ந்தனர்.அப்போது, 'பிரச்னைக்கு தீர்வு கிடைக்காமல் ஏன் கலைந்து செல்கிறீர்கள்' என ஒரு தரப்பு கேட்டதால், இருதரப்பினர் இடையே வாக்குவாதம் நடந்தது. திடீரென கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பினரை சரமாரியாக தாக்கியதால், பதற்றமான சூழல் நிலவியது.அங்கிருந்த, 100க்கும் மேற்பட்ட போலீசார், மோதலை தடுக்க முயன்றனர். இருப்பினும், போலீசார் முன்னிலையில், இரு தரப்பு மோதல் தொடர்ந்ததால், உச்சகட்ட பரபரப்பு நிலவியது.மோதலில் ஈடுபட்டோரை விலக்கிய போலீசார், ஊர் நிர்வாகத்திடம் பேசிய பின், அனைவரும் கலைந்து சென்றனர். எனினும், பதற்றமான சூழல் நிலவி வருவதால், போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.அரசே முடிவெடுக்கும்நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளுக்கு, முன்பணம் செலுத்திய பின், மீதமுள்ள தொகைக்கு, வங்கி கடன் ஏற்பாடு செய்யப்படும். அதன்படி, 1.90 லட்சம் ரூபாய்க்கு, ஏழு ஆண்டுகள் தவணை திட்டப்படி, கூடுதலாக, 60,000 ரூபாய் செலுத்தும்படியாக இருக்கும். அனைத்து குடியிருப்புகளுக்கும் இது தான் விதி. இதை மாற்ற வேண்டும் என்றால், அரசின் முடிவில் தான் உள்ளது. சேதமான வீடுகள், சீரமைக்கப்பட்ட பின்பே, பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும்.- நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ