நெடுங்குன்றம் மார்க்கத்தில் மேம்பால பணி துவக்கம் வனத்துறை அனுமதியால் நான்காண்டு பிரச்னைக்கு தீர்வு
பெருங்களத்துார், மத்திய வனத்துறை அனுமதி கிடைத்ததை அடுத்து, பெருங்களத்துார் மேம்பால திட்டத்தில், நெடுங்குன்றம் சாலை மார்க்கமான பணிகள், 27 கோடி ரூபாய் செலவில் துவங்கியுள்ளன. இதன் வாயிலாக, நான்கு ஆண்டுகளாக நீடித்து வந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெருங்களத்துார் ரயில் நிலையம் அருகில், மாநில நெடுஞ்சாலை- துறை மற்றும் ரயில்வே நிர்வாகம் இணைந்து, 234 கோடி ரூபாயில் மேம்பால பணிகளை துவக்கின. முதற்கட்டமாக, ஜி.எஸ்.டி., சாலையில், செங்கல்பட்டு- - தாம்பரம் மார்க்கமான ஒருவழிப்பாதை, 2022 செப்டம்பரில் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஓரளவுதான் குறைந்தது. அடுத்த கட்டமாக, ரயில்வே தண்டவாளத்தை கடந்து, சீனிவாசா நகரில் இறங்கும் மற்றொரு பாதைக்கான பணிகள் வேகமாக நடந்து, 2023, ஜூன் மாதம் திறக்கப்பட்டது. தொடர்ந்து, ஜி.எஸ்.டி., சாலையில், வண்டலுார் மார்க்கத்திற்கான பணிகளும் முடிக்கப்பட்டு, கடந்த ஆண்டு இறுதியில் திறக்கப்பட்டது. அடுத்ததாக, இம்மேம்பால திட்டத்தில், நெடுங்குன்றம் சாலை மார்க்கத்திற்கான பாதை மட்டுமே நிலுவையில் உள்ளது. இப்பாதை அமையவுள்ள இடத்தின் பெரும் பகுதி, வனத்துறைக்கு சொந்தமானவை. இதற்காக, அனுமதி கேட்டு, நெடுஞ்சாலைத் துறையினர் வனத்துறைக்கு கடிதம் எழுதினர். கிடப்பில் கிடந்த அக்கடிதத்தை, தமிழக வனத்துறை, கடந்த ஆண்டு மத்திய வனத்துறைக்கு அனுப்பியது. அதே நேரத்தில், பெருங்களத்துார் வழியாக ராஜகீழ்ப்பாக்கத்தை இணைக்கும் தாம்பரம் ஈஸ்டர்ன் பைபாஸ் சாலை திட்டத்திற்கும் நிலம் கேட்டு, மத்திய வனத்துறைக்கு கடிதம் சென்றுள்ளது. இரண்டு கடிதங்களையும் பார்த்த மத்திய வனத்துறை அதிகாரிகள், இரண்டையும் ஒரே திட்டம் என புரிந்துகொண்டு, தனித்தனியாக கடிதம் அனுப்பியது ஏன் எனக்கேட்டு, திருப்பி அனுப்பிவிட்டனர். அதன்பின், இரண்டும் ஒரே திட்டம் இல்லை; வேறுவேறு திட்டம் என, அவர்களுக்கு புரியவைத்து, இரண்டாவது முறையாக நிலம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. மற்றொரு புறம், மேம்பாலப்பாதை இறங்கும் இடத்தில், துணை மின் நிலையம் உள்ளது. அதை வேறு இடத்திற்கு மாற்ற, மின் வாரியத்திற்கு, 2024, மார்ச் மாதம், நெடுஞ்சாலைத் துறை சார்பில் 23 கோடி ரூபாய் செலுத்தப்பட்டு, துணை மின் நிலையம் அகற்றப்பட்டது. அதேபோல், பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பின், நெடுங்குன்றம் மார்க்கத்திற்கான பாதை பணிகளுக்கு, மத்திய வனத்துறை அலுவலகம் அனுமதி வழங்கியது. நெடுங்குன்றம் சாலை மார்க்கத்திற்கான பணிக்கு, 2.22 ஏக்கர் நிலம் தேவை. மத்திய வனத்துறை அனுமதி வழங்கியதை அடுத்து, 27 கோடி ரூபாய்க்கு டெண்டர் கோரப்பட்டு, பணிகள் துவங்கியுள்ளன. இப்பணியை ஆறு மாதத்தில் முடிக்க, நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிட்டுள்ளனர். நெரிசல் குறையும் மத்திய வனத்துறை அனுமதி வழங்கியதை அடுத்து, நெடுங்குன்றம் சாலை மார்க்கத்திற்கான பணிகளை துவக்கியுள்ளது மகிழ்ச்சி. அதே நேரத்தில், இப்பணியை வேகப்படுத்தி, குறித்த காலத்திற்குள் முடித்து, பாதையை திறக்க வேண்டும். இம்மேம்பாலம் முழுதுமாக பயன்பாட்டிற்கு வந்தால் தான், தாம்பரத்தில் நிலவும் நெரிசல் குறையும். - பெருங்களத்துார் - பீர்க்கன்காரணை குடியிருப்போர் நலச்சங்கம்.