உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பிரியாணி சமையல் கூடத்திற்கு உணவு துறை அதிகாரிகள் பூட்டு

பிரியாணி சமையல் கூடத்திற்கு உணவு துறை அதிகாரிகள் பூட்டு

திருவேற்காடு, திருவேற்காடு அடுத்த மேல் அயனம்பாக்கம், பாடசாலை தெருவைச் சேர்ந்தவர் அப்பு என்ற தமிழரசன், 30;இவர், 'அப்பு கடை பிரியாணி' என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறார். சென்னையில் 10 இடங்களில் கிளைகள் உள்ளன.பிரியாணி கடைகளின் சமையல் கூடம், திருவேற்காடு, மேல் அயனம்பாக்கம், பச்சையம்மன் நகரில் இயங்கி வருகிறது. இங்கு 30 பேர் பணியாற்றுகின்றனர்.சமூக வலைதளத்தில் பிரபலமான இந்த கடையில், சமையலறை சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும், பிரியாணி தரமற்ற முறையில் இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன. தொடர் புகாரையடுத்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வுக்கு பின், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையிலான உணவு பாதுகாப்பு அதிகாரிகள், நேற்று காலை, சமையல் கூடத்தை 'சீல்' வைக்க முயன்றனர்.அப்போது கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து பிரியாணி டபாராக்கள், சமையல் பாத்திரங்களை சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்து திரும்பி சென்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், பின் போலீஸ் பாதுகாப்புடன் வந்து, சமையல் கூடத்திற்கு 'சீல்' வைத்தனர்.

ஹோட்டலில் ஆய்வு

கொடுங்கையூர், சிட்கோ பிரதான சாலையில், எஸ்.எஸ்.பிரியாணி எனும் பிரபல உணவு விடுதி செயல்படுகிறது.கடந்த 16ம் தேதி, இங்கு பிரியாணி சாப்பிட்ட பலருக்கும், வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன.சிலர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 10க்கும் மேற்பட்டோர், தண்டையார்பேட்டை, காலரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.இதுவரை 40க்கும் மேற்பட்டோருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, கொடுங்கையூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.இந்த நிலையில், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி சதீஷ்குமார், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் இளங்கோ தலைமையிலான அதிகாரிகள், நேற்று மதியம் உணவு விடுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:ஹோட்டலில் பொருட்கள் எதுவும் இல்லாததால், மாதிரிகள் சேகரிக்க முடியவில்லை. சென்னையின் மற்ற கிளைகளில், இது போன்ற பாதிப்பு உள்ளனவா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.அதே போல், இந்த உணவு விடுதியின் மத்திய சமையல்கூடம், திருவள்ளூர் மாவட்டம் அலமாதியில் உள்ளது. அங்கு, அந்த பகுதி உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.அதேபோல், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள எஸ்.எஸ்., பிரியாணி கடையில், கடந்த 16ம் தேதி சாப்பிட்ட சிலருக்கு, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.இதை தொடர்ந்து, அவர்கள் இரண்டு நாட்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பாதிப்பு நீடித்த நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், நேற்று பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ