கிண்டி சிறுவர் பூங்காவில் கடலாமை வடிவில் காப்பகம் வனத்துறை நடவடிக்கை
சென்னை, கிண்டி சிறுவர் பூங்கா வளாகத்தில், கடலாமையின் உருவத்தைபோல், 'கடலாமை காப்பகம்' அமைக்க, வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. வங்கக்கடலில் தமிழகத்தை ஒட்டிய பகுதிகளில், 'ஆலிவ் ரிட்லி' எனப்படும் கடலாமைகள் அதிகமாக காணப்படுகின்றன. இவை ஆண்டுதோறும் டிச., முதல் ஏப்., வரை கடற்கரை பகுதிகளுக்கு வந்து முட்டையிடுவது வழக்கம். திருவள்ளூர் முதல் நாகப்பட்டினம் வரை, பல்வேறு மாவட்டங்களில் கடலாமைகள் இனப்பெருக்கம் நடக்கிறது. கடலாமைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், சென்னை, கிண்டி சிறுவர் பூங்காவில் கடலாமைகள் பாதுகாப்பு மையம் அமைக்க வனத்துறை முடிவு செய்தது. இதுகுறித்து, வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கிண்டி சிறுவர் பூங்காவில், கடலாமைகள் காப்பகம் மற்றும் பாதுகாப்பு மையம் அமைக்க, 1.35 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு, அடித்தளம், தரைதளம், முதல் தளம் என்ற அடிப்படையில் இந்த மையம் அமைய உள்ளது. இந்த வளாகத்தின் பிரதான கட்டடம், கடலாமைகளின் உருவத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. தரையில் இருந்து, 13 அடி உயரத்தில் கடலாமை போன்ற தளம் அமைக்க திட்டமிட்டு உள்ளோம். கட்டுமான பணிக்கான ஒப்பந்ததாரர் தேர்வு பணிகள் துவங்கியுள்ளன. அடுத்த சில மாதங்களில் கட்டுமான பணிகள் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.