கஞ்சா பதுக்கிய நான்கு பேர் கைது
புளியந்தோப்பு: வீட்டில் கஞ்சா பதுக்கி விற்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். புளியந்தோப்பு பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக, தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, புளியந்தோப்பு, சாஸ்திரி நகர் 18வது தெருவில் உள்ள ஒரு வீட்டில், போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு கஞ்சா பதுக்கி விற்பது தெரிய வந்தது. விசாரித்த போலீசார், கஞ்சா பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட, அதே பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன், 28, பிரகாஷ், 43, விக்னேஷ், 30, மற்றும் சுரேஷ், 40, ஆகியோரை, கைது செய்து விசாரித்தனர். அதில், தன் அக்கா ஆனந்தவள்ளி மற்றும் அவரது தம்பி ரமேஷ் ஆகியோர், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து தன்னிடம் கொடுப்பதாகவும், தான் அதை நண்பர்களுடன் சேர்ந்து சிறு, சிறு பொட்டலங்களாக பிரித்து, விற்பனைக்காக அவர்களிடம் கொடுத்து விடுவதாகவும் சுரேஷ் தெரிவித்துள்ளார். அதன்படி, நான்கு பேரிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா, ஐந்து மொபைல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து, நேற்று சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள ஆனந்தவள்ளி மற்றும் ரமேஷை போலீசார் தேடி வருகின்றனர்.