வியாசர்பாடி, கொடுங்கையூர் பகுதிகளில் நான்கு விதிமீறல் கட்டடங்களுக்கு சீல்
கொடுங்கையூர், வியாசர்பாடி, கொடுங்கையூர் பகுதிகளில், விதிமீறல் கட்டடங்களுக்கு மாநகராட்சியினர், 'சீல்' வைத்தனர். சென்னை, வியாசர்பாடி, மேற்கு நிழற்சாலை பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர், 3,500 சதுரடி தரைத்தளத்துடன், மூன்று மாடி கட்டடம் கட்ட, மாநகராட்சியில் அனுமதி வாங்கினார். அதில், 3வது மாடியை சொந்த பயன்பாட்டிற்கு என அனுமதி வாங்கி விட்டு, பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வந்தார். இந்த விதிமீறல் குறித்து, மண்டல அலுவல அதிகாரிக்கு தொடர் புகார்கள் வந்தன. அதேபோல, கொடுங்கையூர், திருவொற்றியூர் நெடுஞ்சாலையைச் சேர்ந்தவர் 'இட்லி' இனியவன். இவர், புதிதாக தரைத்துளத்துடன், மூன்று மாடி கட்டடம் கட்டினார். ஆனால், மாநகராட்சியில் எந்தவித அனுமதியும் பெறவில்லை. அதேபோல, வியாசர்பாடி, எம்.கே.பி.நகர், மேற்கு அவென்யூ சாலையில் இரு கட்டடங்கள் விதிமீறி கட்டப்பட்டது. தொடர் விதிமீறல் கட்டடங்கள் குறித்து, தண்டையார்பேட்டை மண்டல அதிகாரிக்கு புகார் வந்தது. இதுகுறித்து பலமுறை மாநகராட்சி சார்பில் 'நோட்டீஸ்' அனுப்பியும், கட்டட உரிமையாளர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, தண்டையார்பேட்டை மண்டல அதிகாரி ராஜ்குமார் உத்தரவின்படி, மண்டல செயற்பொறியாளர் ஹரிநாத், உதவி செயற்பொறியாளர்கள் சேகர், பாலசந்தர், உதவி பொறியாளர் பிரகாஷ் தலைமையில், 20க்கும் மேற்பட்ட மாநகராட்சியினர், நான்கு விதிமீறல் கட்டடத்திற்கும் நேற்று 'சீல்' வைத்தனர். இதற்கு முன்னதாக, கட்டடங்களின் மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர்.