ஹவாலா பணத்தை பங்கு போட்ட நான்கு போலீசார் துாக்கியடிப்பு
சென்னை, பறிமுதல் செய்யப்பட்ட 'ஹவாலா' பணத்தை, பங்குபோட்டுக் கொண்ட சிறப்பு எஸ்.ஐ.,க்கள் உட்பட நான்கு போலீசாரை, கமிஷனர் அருண் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். மாதவரம் பேருந்து முனையத்தில், கடந்த வாரம் இளைஞர் ஒருவர் ஆட்டோவில், மூன்று மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருந்தார். இதை பார்த்த மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், இளைஞரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரணாக பதில் அளிக்கவே, மூட்டையை சோதனை செய்ததில், பல லட்சம் ரூபாய் மதிப்பில், 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன. பண மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், இளைஞரிடம் விசாரித்ததில், சவுகார்பேட்டையில் உள்ள மோகன் என்ற நகை வியாபாரி கொடுத்து அனுப்பியதை அறிந்தனர். இதையடுத்து, பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால், நகை வியாபாரியை தொடர்பு கொண்ட போலீசார், அவரிடம் பேரம் பேசியுள்ளனர். அப்போது, சில லட்சங்களை எடுத்துக் கொண்டு, மீதமுள்ள பணத்தை இளைஞரிடம் கொடுத்து அனுப்புமாறு நகை வியாபாரி கூறியுள்ளார். அதன்படி, சுருட்டிய பணத்தில் நான்கு பேர், தலா 5 லட்சமும், காவலர்கள் சிலர், 50,000 ரூபாயும் பங்கு போட்டு கொண்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த உளவுத்துறையினர், மேல் அதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சிறப்பு எஸ்.ஐ.,க்களான மோகன்ராஜ், சதீஷ்குமார், ஏட்டு சார்லஸ், போலீஸ்காரர் வேல்முருகன் ஆகியோரை நேரில் அழைத்து, போலீஸ் அதிகாரி ஒருவர் விசாரித்துள்ளார். அதில், பணத்தை வாங்கியது உறுதியானது. இதையடுத்து, சென்னை போலீஸ் கமிஷனர் அருண், நான்கு பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார்.