நில பிரச்னையில் கொலை முயற்சி நான்கு பேருக்கு 5 ஆண்டு சிறை
சென்னை, சென்னை, ெஷனாய் நகர், பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 34. இவர், ஹிந்து திருக்கோவில் கூட்டமைப்பு தலைவராக இருந்து வந்தார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பாலமுரளி, 28, என்பவருக்கும் இடையே, நிலப்பிரச்னை இருந்து வந்தது.முன்விரோதம் காரணமாக, 2021 மார்ச் 10ம் தேதி, தன் அலுவலகத்தில் இருந்த சதீஷ்குமாரை, பாலமுரளி, கொளத்துார் குமரன் நகரைச் சேர்ந்த அப்பாஸ், 34, ெஷனாய் நகரைச் சேர்ந்த வினோத்குமார், 28, சக்திவேல், 23, ஆகியோர், கத்தியால் குத்தினர்.இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ்குமார், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.இது குறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலமுரளி உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சென்னை 19வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர்.ராஜ்குமார் முன் நடந்தது.போலீசார் தரப்பில் கூடுதல் குற்றவியல் அரசு வழக்கறிஞர் எஸ்.தனசேகரன் ஆஜரானார்.வழக்கை விசாரித்த நீதிபதி, பாலமுரளி உள்ளிட்ட நான்கு பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி, அவர்களுக்கு தலா ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.