பள்ளி மாணவர்களுக்காக இலவச மினி பஸ் சேவை
பெருங்குடி:பெருங்குடியில், சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளி உள்ளது. இதில் மாணவர்களை சேர்க்க மாணவர்கள் விருப்பப்பட்டாலும், கல்லுக்குட்டை பகுதியில் இருந்து பெருங்குடி வர போதிய போக்குவரத்து வசதி இல்லை.இந்நிலையில், மாநகராட்சி பள்ளியில் மாணவர்களை சேர்க்க விரும்புவதாகவும், அதற்கான பேருந்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும், பெற்றோர் கையொப்பமிட்ட கோரிக்கை மனு, சென்னை மாநகராட்சியில் கல்விக்கான இணை ஆணையரிடம் வழங்கப்பட்டது.இதுகுறித்து ஆய்வு செய்த மாநகராட்சி கல்வி அதிகாரிகள், பள்ளியில் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கவும், ஏழை எளியோர் பயனடையும் வகையிலும், சிற்றுந்து சேவையை துவக்கி உள்ளனர். இதில் மாணவர்கள் பயணிக்க கட்டணம் கிடையாது.அதன்படி, காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை, கல்லுக்குட்டை அன்னை சந்தியா நகரில் இருந்து, 3 கி.மீ., துாரமுள்ள பெருங்குடி மாநகராட்சி பள்ளிக்கு மூன்று நடைகளும், மாலை 3:45 மணி முதல் 4:30 வரை வீடு திரும்ப மூன்று நடைகளும், சிற்றுந்து இயக்கப்படுகிறது.மாணவர்கள் பாதுகாப்பிற்காக, சிற்றுந்தில் பள்ளி ஊழியர் ஒருவர், அன்னை சத்தியா நகர் நிறுத்தத்தில் ஒருவர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மாநகராட்சியின் இந்த நடவடிக்கையால் அந்த பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதாக தெரிகிறது.