நள்ளிரவில் அடிக்கடி மின்தடை
திருவொற்றியூர்:திருவொற்றியூரில் இரு தினங்களாக, நள்ளிரவு 11:00 மணி முதல் அதிகாலை வரை, சில நிமிடங்கள் இடைவெளி விட்டு, மின் தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் குடியிருப்புவாசிகள் மாடிக்கும், வீட்டிற்கு பாய் - தலையணையுடன் அலைந்தபடியாக துாக்கமிழந்து தவிக்கின்றனர்.இது குறித்து மின்வாரிய அதிகாரி கூறுகையில், ''வெயில் காலம் என்பதால் மின் நுகர்வு அதிகரிக்கும். அதை தாக்குபிடிக்கும் வகையில் மின்மாற்றி இருப்பதில்லை. இதன் காரணமாக, அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இருப்பினும், உடனடியாக சரி செய்து மின் வினியோகம் செய்யப்படுகிறது,'' என்றார்.புழல்
புழல், மாதவரம், புத்தகரம் மற்றும் விநாயகபுரம் உள்ளிட்ட பகுதிகளில், இரவு 9:00 மணிக்கு மேல் குறைந்த மின் அழுத்தத்தால் பாதிப்பு மற்றும் மின் வினியோகம் தடைபடுகிறது. மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'பராமரிப்பு பணிகள் ஆங்காங்கே நடந்து வருகிறது. பழுதான டிரான்ஸ்பார்மர்கள் சரி செய்யப்பட்டுள்ளன. சில இடங்களில் பழுதான மின்கேபிள்களால் பாதிப்பு ஏற்படுகிறது. அவற்றை கண்டறிந்து சரி செய்து வருகிறோம்' என்றனர்.புறநகரில் பரிதவிப்புசென்னை புறநகர், சேலையூர் அடுத்த சந்தோஷபுரம், விசாலாட்சி நகர் 2வது தெருவில், இரு தினங்களுக்கு முன் இரவு 11:30 மணிக்கு, மின்வெட்டு ஏற்பட்டது.இப்பகுதிக்கு மாடம்பாக்கம், செம்பாக்கம் துணைமின் நிலையங்களில் இருந்து மின்சாரம் வழங்கப்படுகிறது. இதில் ஒரு பகுதிக்கான மின் வினியோகத்தில் தடங்கல் ஏற்பட்டதால், 20க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.இதனால் பாதிக்கப்பட்டோர், அப்பகுதியில் உள்ள மின் அலுவலகத்திற்கு புகார் அளிக்க நேராக சென்றுள்ளனர். அலுவலகத்தில் யாரும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். புகார் எண்ணை தொடர்பு கொண்டபோதும் உரிய நடவடிக்கை இல்லை.மறுநாள் காலை, 7:30 மணிக்கு பழுது சரிசெய்யப்பட்ட பின்னரே, அந்த வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. இதேபோல, புறநகர் பகுதிகளில் இதுபோல் பல இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.