வேளச்சேரி, அகரம்தென் பகுதி மேம்பாட்டு பணிக்கு நிதி ஒதுக்கீடு
வேளச்சேரி: வேளச்சேரி மற்றும் அகரம்தென் பகுதிகளில், பூங்கா, சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக, மாநகராட்சி சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அடையாறு மண்டலம், 177வது வார்டு, வேளச்சேரி, சேவா நகரில், 1.50 ஏக்கர் பரப்பில் காலி இடம் உள்ளது. இந்த இடத்தில், பூங்கா அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து, பூங்கா அமைக்க, மாநகராட்சி சார்பில், 1.47 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில், பூங்கா அமைக்கும் பணி துவங்கும் என, அதிகாரிகள் கூறினர். அதேபோல், சேலையூரை அடுத்த அகரம்தென் ஊராட்சியில், 1.18 கோடி ரூபாய் செலவில், நீர்த்தேக்க தொட்டி, பூங்கா உள்ளிட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. தாம்பரம் சட்டசபை தொகுதி, அகரம்தென் ஊராட்சியில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பூங்கா, சாலை, மழைநீர் கால்வாய் அமைத்தல் போன்ற பணிகளுக்காக, 1.18 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. இதில், தாம்பரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜா பங்கேற்று, பணிகளை துவக்கி வைத்தார்.