உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பாடியில் மாமூல் பணம் கேட்டு கர்ப்பிணி அவரது கணவரை தாக்கிய கஞ்சா கும்பல் மண்ணெண்ணெய் குண்டு வீசியும் அராஜகம்

பாடியில் மாமூல் பணம் கேட்டு கர்ப்பிணி அவரது கணவரை தாக்கிய கஞ்சா கும்பல் மண்ணெண்ணெய் குண்டு வீசியும் அராஜகம்

ஜெ.ஜெ., நகர், மாமூல் கேட்டு கர்ப்பிணியை கத்தியால் குத்த முயன்றதுடன், அப்பகுதியில் உள்ள ரவுடியின் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசி அட்டூழியம் செய்த கஞ்சா கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். பாடி, கலைவாணர் நகரைச் சேர்ந்தவர் வேல்முருகன், 33. இவர், அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி தமிழ்மதி, 29; எட்டு மாத கர்ப்பிணி. நேற்று முன்தினம் இரவு, வேல்முருகன் மளிகை கடையில் இருந்தபோது, அப்பகுதியில் நடந்த துக்க நிகழ்வுக்கு வந்த கஞ்சா கும்பல், மாமூல் கேட்டு மிரட்டியுள்ளது. அவர் தர மறுத்ததால், அவரை சரமாரியாக தாக்கிய கஞ்சா கும்பல், மாதந்தோறும் 5,000 ரூபாய் தர வேண்டும் என மிரட்டி, வேல்முருகனை தாக்கியுள்ளது. வேல்முருகனின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த அவரது மனைவி தமிழ்மதியின் வயிற்றில், கடையில் இருந்த கத்தியை எடுத்து கஞ்சா கும்பல் குத்த முயன்றது. தமிழ்மதி சாதுர்யமாக தப்பிவிட, அவரது காது மற்றும் முதுகில், கஞ்சா கும்பல் கத்தியால் கிழித்துவிட்டு தப்பியது. வேல்முருகன், தமிழ்மதி இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஒன்றுகூடிய மக்கள் அங்கிருந்து தப்பிய கஞ்சா கும்பல், அண்ணா நகர் ரவுண்ட் பில்டிங் பகுதியைச் சேர்ந்த ரவுடியான மணிரத்தினம், 27, வீட்டிற்கு சென்று, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சரமாரியாக தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் ஒன்றுகூடியதால், கஞ்சா கும்பல் தப்ப முயன்றது. அப்போது, தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை பற்றவைத்து, மணிரத்தினத்தின் வீட்டின் மீது வீசி விட்டு தப்பினர். காயமடைந்த ரவுடி மணிரத்தினம், அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார். மருத்துவமனை அளித்த தகவலின்படி, இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும், ஜெ.ஜெ., நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், கடலுாரைச் சேர்ந்த ரவுடி சுனாமி சூர்யா, கஞ்சா போதையில், தன் கூட்டாளிகளுடன் இணைந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. போலீசார் கஞ்சா கும்பலை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி