உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கும்பல் கும்பலாக இரவில் நடந்த பைக் ரேஸ்தொடர்கதை:ஒரே நாளில் 40 வாகனங்கள் பறிமுதல்

கும்பல் கும்பலாக இரவில் நடந்த பைக் ரேஸ்தொடர்கதை:ஒரே நாளில் 40 வாகனங்கள் பறிமுதல்

சென்னை:சென்னை அண்ணா சாலை, திருமங்கலம் உட்பட பல முக்கிய சாலைகளில் நேற்று முன்தினம் இரவு, பைக் ரேஸ் அட்டகாசத்தில் ஈடுபட்ட 40 பேரின் வாகனங்களை, போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பைக் ரேசில் ஈடுபட்டோருக்கு தலா, 2,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.சென்னை பிரதான சாலைகளில் வார இறுதி நாட்களில், வாலிபர்கள் பந்தயம் கட்டி, பைக் ரேசில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்காகவே, இருசக்கர வாகனங்களை பிரத்யேகமாக அதிக ஒலி எழுப்புமாறும், மின்னல் வேக பயணத்திற்கு ஏற்ப தயார் செய்கின்றனர். இத்தகைய வேலைகளை செய்ய, சென்னை எழும்பூர், புதுப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, பூக்கடை உள்ளிட்ட இடங்களில் மெக்கானிக் கடைகள் உள்ளன.இவற்றின் உரிமையாளர்களை, போலீசார் பல முறை எச்சரித்துள்ளனர். எனினும், நட்பு மற்றும் வியாபார அடிப்படையில், பைக் ரேசுக்கு ஏற்ப இருசக்கர வாகனங்கள் தயார் செய்வது தொடர்கிறது.சென்னையில் மார்ச், ஏப்ரல் மாதங்களில், ரோமியோக்கள் பைக் ரேசில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.அவர்கள், நள்ளிரவு துவங்கி, அதிகாலை 3:00 மணி வரை, சென்னையின் பிரதான சாலைகளில் அட்டூழியம் செய்து வருகின்றனர்.பைக் ரேசில் பலர் உயிரிழந்துள்ளனர். போலீசாரும் இதை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆனாலும், தும்பை விட்டு வாலைப் பிடித்த கதை போல பைக் ரேஸ் நடந்து முடிந்து, அது பற்றி சமூக வலைதளங்களில், 'வீடியோ' பரப்பி பலரின் கவனத்தை ஈர்த்த பின் தான், நடவடிக்கை எடுக்கவே போலீசார் தயாராகின்றனர்.அதற்குள், பைக் ரேஸ் ரோமியோக்கள் பறந்து விடுகின்றனர். இதனால், பைக் ரேஸ் ரோமியோக்கள் அட்டகாசம் குறைந்தபாடில்லை.கடந்த 23ம் தேதி, சென்னை அண்ணா சாலையில் 14 பேர், பைக் ரேசில் ஈடுபட்டு அட்டகாசம் செய்தனர். அவர்களை தனிப்படை போலீசார் பிடித்து, இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதில், 14 பேருக்கும் தலா, 1,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.பெற்றோரை நேரில் வரவழைத்து, பைக் ரேஸ் ரோமியோக்களின் அட்டகாசங்களை எடுத்துரைத்தனர். மேலும், அவர்களின் பெற்றோர் முன், 'இனி எவ்வித குற்றங்களிலும் ஈடுபட மாட்டேன்' என, உறுதிமொழி பத்திரம் பெற்றனர். இதை மீறினால், கைது செய்து சிறையில் அடைக்கவும் சம்மதம் தெரிவித்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, அண்ணா சாலை, வேப்பேரி, அண்ணா நகர், திருமங்கலம், திருவல்லிக்கேணி, கிண்டி, அசோக் நகர் ஆகிய பகுதிகளில், முக்கிய சாலைகளில் கும்பல் கும்பலாக பைக் ரேசில் ஈடுபட்டுட்டனர்.அதிக ஒலி எழுப்பியும், சீறிப் பாய்ந்தும் ரகளையில் ஈடுபட்டுள்ளதால், இரவில் சென்ற வாகன ஓட்டிகளை பதற வைக்கும் வகையில் அமைந்தது.இது குறித்து, சாலைகளில் வைக்கப்பட்டுள்ள நவீன கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது.அங்கிருந்து, அந்தந்த பகுதி இரவு நேர போலீசாருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டு, போக்குவரத்து போலீசார் களமிறங்கினர். ஒரே இரவில், 40 பேரின் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.பைக் ரேசில் ஈடுபட்டோருக்கு, 2,000 ரூபாய்; அதிவேகமாக வாகனம் ஓட்டியோருக்கு, 1,000 ரூபாய் அபராதமும் விதித்தனர்.சென்னை மாநகர போக்குவரத்து போலீஸ் திட்டமிடல் பிரிவு உதவி கமிஷனர் பாஸ்கர் கூறியதாவது:சென்னையின் பிரதான சாலைகளில் அதிவேகமாக வாகனம் ஓட்டுவோரை கண்காணிக்க, 30 இடங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.அவற்றில், வாகன பதிவு எண் தகடை துல்லியமாக படம் பிடிக்கும் தொழில்நுட்ப வசதி உள்ளது. பைக் ரேசில் ஈடுபடுவோரை படம் பிடித்து, போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் அனுப்பிவிடும்.சென்னை முழுதும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக, பைக் ரேஸ் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோரை பிடிக்க, 56 படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தனிப்படை போலீசார், பைக் ரேஸ் ஆசாமிகள் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Krishnamurthy Venkatesan
மார் 29, 2025 13:10

"இதற்காகவே, இருசக்கர வாகனங்களை பிரத்யேகமாக அதிக ஒலி எழுப்புமாறும், மின்னல் வேக பயணத்திற்கு ஏற்ப தயார் செய்கின்றனர். இத்தகைய வேலைகளை செய்ய, சென்னை எழும்பூர், புதுப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, பூக்கடை உள்ளிட்ட இடங்களில் மெக்கானிக் கடைகள் உள்ளன." இந்த கடைகளை raid விட்டு உரிமத்தை cancel செய்யுங்கள். மீண்டும் தவறு செய்யும் பைக் ஓட்டிகளுக்கு சிறை தண்டனை பெற்று தாருங்கள். ரேஸ் விடுவது நின்று விடும்.


நிக்கோல்தாம்சன்
மார் 29, 2025 05:31

அவங்க கட்சி கொடி கட்டியிருந்தா இந்த நடவடிக்கை எடுத்துருப்பீங்களா யுவர் ஹானர் ? ஏன் இன்னமும் பெண்களை விரட்டியவர்களின் கைது பற்றியோ அவர்களின் டீடைலா வெளியிடப்படவே இல்லை ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை