தாய்லாந்தில் இருந்து கடத்திவந்த ரூ.11.80 கோடி கஞ்சா பறிமுதல்
சென்னை,தாய்லாந்தில் இருந்து கடத்திவரப்பட்ட 12 கோடி ரூபாய் மதிப்பிலான உயர்ரக கஞ்சா, சென்னை விமான நிலையத்தில் நேற்று பறிமுதல் செய்யப்பட்டது. தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் கஞ்சா கடத்துவதாக மத்திய வருவாய் புலனாய்வு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், நள்ளிரவு 12:20 மணிக்கு 'தாய் ஏர்வேஸ்' பயணியர் விமானத்தில் வந்திருந்த பயணியரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பினர். தமிழகத்தை சேர்ந்த ஆண் பயணி ஒருவரின் உடமைகளை சோதனையிட்ட போது, உயர் ரக கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் எடை 3.90 கிலோ. இதன், சர்வதேச மதிப்பு 3.90 கோடி ரூபாய். அதே விமானத்தில் வந்த மற்றொரு பயணியின் உடமையில் சோதனை செய்த போது 7.9 கிலோ உயர் ரக கஞ்சா இருந்ததும் கண்டுபிக்கப்பட்டது. அதன் மதிப்பு 7.90 கோடி ரூபாய். விசாரணையில் இருவரும் இணைந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதன் பிண்ணனியில் உள்ளவர்களை சுங்க அதிகாரிகள் தேடி வருகின்றனர். கடந்த 17ம் தேதி சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த இரண்டு பயணியரின் உடைமையை சோதனையிட்ட போது, அதில் 11.60 கிலோ சுறா துடுப்பு இருந்தது. அதன் மதிப்பு ஐந்து லட்சம் ரூபாய். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் வெளிநாட்டு வர்த்தக தடுப்பு சட்டத்தின் கீழ் இருவரையும் கைது செய்தனர். ★★★