செம்மஞ்சேரி கால்வாயை ஒட்டி குப்பை குவியல்: நீரோட்ட தடையால் வெள்ள பாதிப்பு அபாயம்
சென்னை: வெள்ள பாதிப்புக்கு காரணமான, செம்மஞ்சேரி கால்வாயை ஒட்டி குவிந்துள்ள குப்பையை அகற்றி, மேலும் கொட்டாதவாறு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிமக்கள் கூறினர். தென் சென்னை மற்றும் புறநகரில் உள்ள ஏரிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், செம்மஞ்சேரி கால்வாய் வழியாக சதுப்பு நிலத்தை அடைகிறது. இந்த கால்வாய் அருகில், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் மற்றும் பெரும்பாக்கம் அரசு கல்லுாரி உள்ளது.இந்த கல்லுாரி அருகில் சாலை முடியும் இடத்தில், செம்மஞ்சேரி ஊராட்சி எல்லையில், குப்பை கொட்டி குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பை, காற்று மற்றும் மழைநீரில் அடித்து சென்று கால்வாயில் அடைப்பு ஏற்படுத்துகிறது. இதனால், செம்மஞ்சேரி கால்வாயில் நீரோட்டம் தடை ஏற்பட்டு, தொடர் கனமழை பெய்தால் வெள்ள பாதிப்பு ஏற்படும். நுாக்கம்பாளையம் இணைப்பு சாலை, சித்தாலப்பாக்கம், பெரும்பாக்கம், செம்மஞ்சேரி பகுதிகளில் மூடுகால்வாய் கட்டியதால் வெள்ள பாதிப்பு குறைந்தது. ஆனால், இந்த குப்பையால் செம்மஞ்சேரி கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, மேற்கண்ட பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. பருவமழை முடியாத நிலையில், வெள்ள பாதிப்புக்கு காரணமான குப்பையை அகற்றி, மேலும் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிமக்கள் கூறினர்.