எம்.எப்.எல்., தொழிற்சாலையில் வாயு கசிவு: கண் எரிச்சல், மூச்சு திணறலால் மக்கள் அவதி
மணலி: மணலி எம்.எப்.எல்., உர தொழிற்சாலையில், திடீரென அமோனியா வாயு கசிவால், பொதுமக்கள் கண் எரிச்சல், மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டனர். மணலியில், மத்திய அரசுக்கு சொந்தமான, எம்.எப்.எல்., என்ற உர தொழிற்சாலை உள்ளது. நேற்று இரவு தொழிற்சாலை அருகே உள்ள சாலையில் வாகனத்தில் சென்றவர்களுக்கு, அமோனியா வாயு துர்நாற்றம் காரணமாக கண் எரிச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் பீதியடைந்த வாகன ஓட்டிகள், பொதுமக்கள் முகத்தில் கர்சிப்பை கட்டிக்கொண்டு, தொழிற்சாலையை கடந்து சென்றனர். போக்குவரத்து போலீசாரும், முகத்தில் துணியை கட்டிக்கொண்டு போக்குவரத்தை சீர்செய்தனர். வாயு கசிவு குறித்து, அப்பகுதி மக்கள், மணலி போலீசாருக்கும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். எம்.எப்.எல்., தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் அமோனியா, புகைபோக்கி வழியாக அதிகப்படியாக வெளியேறியதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருக்கலாம் என, கூறப்படுகிறது.