தண்ணீர் தொட்டியில் மூழ்கி இரண்டு வயது குழந்தை பலி
சேலையூர், மேற்கு வங்கம், ஜொலுஸ்பூரை சேர்ந்தவர் அக்ரோஷ் ஷேக், 35. இவரது மனைவி அமிலா. இவர்களுக்கு, 13, 10 மற்றும் இரண்டு வயதில், மூன்று மகன்கள். அக்ரோஷ் ஷேக், கடந்த 15 ஆண்டுகளாக, கூடுவாஞ்சேரி பகுதியில் கட்டட வேலை செய்து வருகிறார்.நேற்று முன்தினம், சேலையூரை அடுத்த கவுரிவாக்கத்தில் நடக்கும் கட்டுமானப் பணிக்கு, கடைசி மகனான பிலால் ஷேக்குடன் தம்பதி சென்றனர். குழந்தையை கீழ்தளத்தில் விளையாட விட்டு, இருவரும் முதல் மாடியில் பணியில் ஈடுபட்டிருந்தனர்.மதிய உணவு இடைவேளையின் போது, கீழே இறங்கி வந்து பார்த்தபோது, குழந்தையை காணவில்லை. சுற்றுப்பகுதியில் தேடியபோது, 'லிப்ட்' அமைப்பதற்காக கட்டப்பட்டிருந்த தொட்டியில், குழந்தை மூழ்கிய நிலையில் கிடந்தது.அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை மீட்டு, அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.குழந்தையின் உடலை கைப்பற்றிய சேலையூர் போலீசார், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.