ராட்சத குழாய் உடைந்து குடிநீர் வீண் குளமான பொன்னேரி நெடுஞ்சாலை
மணலி, ராட்சத குடிநீர் குழாய் உடைந்து, பொன்னேரி நெடுஞ்சாலையில் குளம்போல் தேங்கிய தண்ணீரால் போக்குவரத்து சிரமமானது. மாதவரத்தில் இருந்து, மணலி - சி.பி.சி.எல்., சந்திப்பு வழியாக, பொன்னேரி நெடுஞ்சாலையின், எம்.எப்.எல்., சந்திப்பில் உள்ள குடிநீரேற்று நிலையத்திற்கு, ராட்சத குழாய் வழியாக, குடிநீர் வினியோகமாகி வருகிறது. நேற்று முன்தினம் முதல், எம்.எப்.எல்., சந்திப்பு, மின்வாரிய அலுவலகம் அருகே, குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் கசிய துவங்கியது. நேற்று காலை, அதிகளவில் குடிநீர் வெளியேறி, பொன்னேரி நெடுஞ்சாலையில், 30 அடி துாரம், 1 அடி உயரத்திற்கு குளம் போல் தேங்கியது. இதனால், எம்.எப்.எல்., சந்திப்பு - சி.பி.சி.எல்., சந்திப்பு வரையுள்ள, பொன்னேரி நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இலகுரக வாகன ங்கள் அவ்வழியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'மாதவரத்தில் இருந்து வரும் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. தகவல் கிடைத்தவுடனே, சரி செய்யும் பணி துவக்கப்பட்டது. இன்றைக்குள் நிலைமை சீராகும்' என்றனர்.