உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பணி பாதுகாப்பு உள்ளிட்ட 15 சலுகைகள் அறிவிப்பு; போராட்டத்தை கைவிட துாய்மை பணியாளர்கள் மறுப்பு

பணி பாதுகாப்பு உள்ளிட்ட 15 சலுகைகள் அறிவிப்பு; போராட்டத்தை கைவிட துாய்மை பணியாளர்கள் மறுப்பு

சென்னை: துாய்மை பணியை தனியார்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து, 12 நாட்களாக ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பணி பாதுகாப்பு, போனஸ் உள்ளிட்ட, 15 விதமான சலுகைகளை மாநகராட்சி அறிவித்தது. இவ்வாறு சலுகைகளை அறிவித்த பிறகும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பாமல் துாய்மை பணியாளர்கள் அடம்பிடித்து வருகின்றனர். சென்னை மாநகராட்சி, ராயபுரம், திரு.வி.க., நகர் மண்டலங்களில், தனியார் நிறுவனத்தின் வாயிலாக, ஜூலை 16ம் தேதி முதல் திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், 1ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில், தற்காலிக துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு, அ.தி.மு.க., - காங்., - நா.த.க., - கம்யூ., உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, போராட்டத்தை கைவிட்டு துாய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். தனியார் நிறுவன பணியில் பணி பாதுகாப்பு மற்றும் பல்வேறு சலுகைகள் இருப்பதாக, மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:

தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், சுய உதவி குழுக்கள் வாயிலாக, தற்காலிக பணி அடிப்படையில் துாய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த முறையில், வருகை அடிப்படையில் தினக்கூலி கணக்கிட்டு வழங்கப்பட்டது. இப்பணி வெளி முகமையாக, சுய உதவி குழுக்களின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2020ல் இருந்து, 10 மண்டலங்களில் முழுமையாகவும், ஒரு மண்டலத்தில் பகுதியாகவும், பொது மற்றும் தனியார் பங்களிப்பு முறையில், திடக்கழிவு மேலாண்மை பணி செய்யப்படுகிறது. இந்த 11 மண்டலங்களில் பணியாற்றிய, 4,994 தற்காலிக துாய்மை பணியாளர்கள், தனியார் நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர். அந்த 11 மண்டலங்கள் போல் தான், ராயபுரம், திரு.வி.க., நகர் மண்டலங்களும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு, அதே நடைமுறை பின்பற்றப்பட்டது. ஆனால், துாய்மை பணியாளர்கள் இவற்றை ஏற்காமல், போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதனால், பல்வேறு சேவைகள் பெறுவதற்காக, மாநகராட்சி ரிப்பன் மாளிகை வரும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், 12க்கும் மேற்பட்ட சுற்றுகள் அமைச்சர்கள் பேச்சு நடத்தியும், தீர்வு காணப்படவில்லை. சென்னை உயர் நீதிமன்றம், தொழில் தீர்ப்பாயத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளதால், அவற்றின் முடிவுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த போராட்டத்தால், ராயபுரம், திரு.வி.க., நகர் மண்டலங்களில் வசிக்கும், 20 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு, அம்மண்டலங்களில் குப்பை தேக்கம் ஏற்பட்டுள்ளது. தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள இரண்டு மண்டலங்களில், 3,809 பேர் நியமிக்கப்பட வேண்டும். இதில், 1,770 பேரை அந்நிறுவனம் பணியமர்த்தி உள்ளது. 2,039 பணியிடங்கள், ஏற்கனவே பணியாற்றியவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. எந்த பணியாளரும் நீக்கம், பணி மறுப்பு செய்யப்படவில்லை. தனியார் நிறுவனத்தில் சேரும் துாய்மை பணியாளர்களுக்காக, 15 வகையான சலுகைகள் உள்ளன. மேலும், 100 சதவீதம் பணி பாதுகாப்பும் உள்ளது. எனவே, வேலை நிறுத்தத்தை கைவிட்டு, பணிக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சலுகைகள் என்னென்ன?

1. வருங்கால வைப்பு நிதி 2. இ.எஸ்.ஐ., மருத்துவ காப்பீடு 3. போனஸ் 4. பண்டிகை கால சிறப்பு உதவிகள் 5. திருமண உதவித்தொகை மற்றும் கல்வி உதவித்தொகை 6. விபத்து காப்பீடு, இயற்கை மரண நிவாரணம் 7. ஆண்டுதோறும் முழு உடல் பரிசோதனை 8. திருமண உதவி தொகையாக ரூ.20,000 9. கல்வி உதவி தொகையாக ரூ.12,000 10. மரண நிகழ்வுக்கான நிதி உதவி 11. புத்தகத்திற்கான நிதி உதவி 12. கணினி பயிற்சி நிதி உதவி 13. சம்பளத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு - 12 நாட்கள் 14. சம்பளத்துடன் கூடிய ஈட்டிய விடுப்பு - 12 நாட்கள் 15. தேசிய விடுமுறை நாட்களில் இரட்டிப்பு சம்பளம்

விரைவில் தீர்வு

துாய்மை பணியாளர்களை துறை அமைச்சராகிய நான் சந்தித்து பேசவில்லை என்பது தவறு. நான்கு நாட்கள் அவர்களிடம் பேச்சு நடத்தினோம்; பிரச்னையை சுமூகமாக தீர்க்க முயற்சித்து வருகிறோம். பணி நிரந்தரம் குறித்து, முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும். துாய்மை பணி பிரச்னை நாடு முழுதும் உள்ளது. அவர்கள் சொல்வது போல் பணி நிரந்தரம், ஒரே நாளில் செய்யும் காரியம் அல்ல. ஓரிரு நாட்களில் துாய்மை பணியாளர்கள் பிரச்னை முடிவுக்கு வரும். - நேரு, அமைச்சர் நகராட்சி நிர்வாகத்துறை.

பொய் தகவல்

மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை, முழுக்க முழுக்க தவறானது. துாய்மை பணியாளர்களின் வருகை பதிவேட்டில், மாநகராட்சி அதிகாரிகள் தான் கையெழுத்து போட்டுள்ளனர். கூச்சம் இல்லாமல், வேலைக்கு திரும்பியதாக பொய் தகவல்களை வெளியிட்டுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் வந்து பேச வேண்டும். துாய்மை பணியாளர்களுக்கு நான் வாக்குறுதி கொடுக்கவில்லை என்று சொன்னால், இப்போதே கூடாரத்தை கலைத்து விட்டு செல்ல தயார். - கு.பாரதி, தலைவர், உழைப்போர், உரிமை இயக்கம்.

அரசியல் கட்சிகள் ஆதரவு

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் துாய்மை பணியாளர்களுக்கு, பல்வேறு அரசியல் கட்சிகள் நேரில் ஆதரவு அளித்து வருகின்றன. அவ்வாறு ஆதரவு அளிக்கும் கட்சியினர் பணமாகவோ, உணவு, டீ, பிஸ்கெட், தண்ணீர் போன்றவற்றை அளித்து, போராட்டத்தை ஊக்குவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ManiMurugan Murugan
ஆக 13, 2025 23:22

சென்னை மாநகராட்சி எப்போது தனியார் மயமாக்கப்பட்டது ராயபுரம் போன்ற பகுதிகள் பழைய சென்னை அங்கு ஒப்பந்த பணியாளர்கள் இருக்க வாய்ப்பு இல்லை 2000 பேர் ஒப்பந்த பணியாளர் என்பது பொய் மாநகராட்சி பணியாளர்கள் ஒப்பந்தப் பணியாளர்களாக மாற்றப் படுவது தான் உண்மை பற்றாக்குறை குறை க்காக ஒப்பந்த அமைப்பு அமைக்கப்பட்டதை மொத்தமாக மாற்ற துடிப்பு ஏனோ அதுவும் வேறு மாநிலத்தவருக்கு தமிழகத்தில் ஆள் இல்லையா பணி நிரந்தரம் ஒப்பு க்கு ஒப்பாரி வைத்தால் இப்படி தான் அவர்கள் உழைப்பை ப் பொறுத்து முடிவு எடுங்கள்


புதிய வீடியோ