தேர்தலின்போது அரசுக்கு நெருக்கடி வரும் அரசு பணியாளர்கள் சங்கம் எச்சரிக்கை
சென்னை: துாய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக, அரசு பணியாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே, நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்தில், சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன், மாநில தலைவர் சுகமதி, பொதுச்செயலர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது: உள்ளாட்சி நிறுவனங்களில் துாய்மை உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் தனியார் நிறுவனங்களிடம் தரப்படுகின்றன. இதனால், அரசு பணியை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் மிஞ்சுகிறது. அவர்கள், தனியார் நிறுவனங்களில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. உள்ளாட்சி பணியாளர்களை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதை தடுக்க வேண்டும். பணிநிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும். அரசு மீது ஊழியர்களின் அதிருப்தி அதிகரித்து வருகிறது. சட்டசபை தேர்தலின்போது பெரிய நெருக்கடியை சந்திக்க வேண்டி இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.