உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தாய்லாந்தில் இருந்து கஞ்சா கடத்தி சப்ளை செய்த பட்டதாரி வாலிபர் கைது

தாய்லாந்தில் இருந்து கஞ்சா கடத்தி சப்ளை செய்த பட்டதாரி வாலிபர் கைது

சூளைமேடு, தாய்லாந்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்த, மாங்காடு பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டார். சென்னையின் அரும்பாக்கம், சூளைமேடு பகுதிகளில், கோகைன், மெத் ஆம்பெட்டமைன், கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட மூன்று ஆப்ரிக்கர்கள் உட்பட, 27 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து, 65 கிராம் கோகைன், 20 கிராம் ஒரிஜினல் கஞ்சா, 6 கிராம் கஞ்சா ஆயில், மூன்று கிலோ சாதாரண கஞ்சா மற்றும் 27 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களின் மொபைல் போன்களை ஆய்வு செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மாங்காடு பகுதியைச் சேர்ந்த தினேஷ், 30, என்பவர், தாய்லாந்து நாட்டில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, சென்னையில் வினியோகம் செய்வது தெரிய வந்தது. வீட்டில் வைத்து அவரை, நேற்று போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து, 50,000 ரூபாய் மதிப்பிலான, ஒரிஜினல் கஞ்சா மற்றும் அவரது மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு, பட்டதாரியான தினேஷ், அடிக்கடி தாய்லாந்து சென்று கஞ்சா கடத்தி வந்து, சென்னையில் வினியோகம் செய்து வந்துள்ளார். அந்த வகையில், எட்டு முறை தாய்லாந்து சென்று, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வந்து லட்சக்கணக்கில் சம்பாதித்துள்ளார். தினேஷிடம் மொபைல் போனில் பேசிய நபர்களின் பட்டியலை தயார் செய்து, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை