உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உள்ளாட்சி தினத்தில் கிராமசபை கூட்டம்

உள்ளாட்சி தினத்தில் கிராமசபை கூட்டம்

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு பல இடங்களில் கிராமசபை கூட்டம் நடந்தது. முடிச்சூர் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில், துாய்மை பணியாளர்கள் மற்றும் சிறப்பாக செயல்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவினர் கவுரவிக்கப்பட்டனர். 'விடுப்பட்ட சாலை பணிகள் மற்றும் ரங்கா நகர் குளம் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்' என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.பொழிச்சலுார் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக, பல்லாவரம் எம்.எல்.ஏ., கருணாநிதி கலந்து கொண்டார். துாய்மை பணியாளர்கள் 60 பேர் கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து, 'வினாயகா நகர், நேரு நகர், பாரதி நகர் பகுதிகளில், மேய்கால் புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு, காலி செய்யுமாறு வருவாய் துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதை தடுக்கக் கோரி எம்.எல்.ஏ.,விடம் மனு கொடுத்தனர். கவுல்பஜார் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது. 'கவுல்பஜார் ஊராட்சி மற்றும் பல்லாவரம் செல்லும் சாலையில், மாடுகளின் தொல்லை பல மடங்கு அதிகரித்து விட்டது. சாலையில் திடீரென குறுக்கும் நெடுக்குமாக ஓடுவதால், விபத்து ஏற்படுகிறது. பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தாத வகையில், மாடுகளை வளர்க்க வேண்டும்' என, தீர்மானம் கொண்டு வரப்பட்டது.மேலும், 'குடியிருப்பு பகுதிகளில் பன்றிகள் அதிகளவில் சுற்றித் திரிவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் சூழலும் ஏற்பட்டுள்ளது. அதனால், குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சோராஞ்சேரி ஊராட்சி சார்பில், ஆவடி அடுத்த பட்டாபிராம், அணைக்கட்டுசேரி பஞ்சாயத்து அலுவலகம் அருகே, சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. இதில், அமைச்சர் நாசர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கிராம ஊராட்சிகளில் சிறப்பாக பணியாற்றிய துாய்மை பணியாளர்கள் 11 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. 'அணைகட்டுச்சேரி மற்றும் ஜெ.ஜெ நகரில் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க வேண்டும். சோராஞ்சேரி வழியாக கூடுதலாக அரசு பேருந்துகள் இயக்க வேண்டும். வருமான வரி கட்டுவோருக்கும், மாதந்தோறும் வழங்கப்படும் மகளிர் உதவி தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சோராஞ்சேரி, அண்ணா தெருவில் கழிவறை கட்டித்தர வேண்டும்' என, பொதுமக்கள் சார்பில் அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

அமைச்சர் உறுதி

காஞ்சிபுரம் மாவட்டம் அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம், ஊராட்சி தலைவர் ஜமீலா பாண்டுரங்கன் தலைமையில் நடந்தது. இதில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்றார். பகுதி மக்கள் கூறிய புகார்களுக்கு, அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து உடனடியாக தீர்வு காண்பதாக அமைச்சர் தெரிவித்தார். 'அய்யப்பன்தாங்கல் பகுதியில் தெரு நாய் தொல்லை அதிகமாக இருக்கிறது' என, பெண் ஒருவர் புகார் கூற, ‛நீங்கள் தான் சோறு போடுகிறீர்கள்' என அமைச்சர் பதில் அளித்தார். குடிநீர் வசதி குறித்து எழுந்த புகாருக்கு, 'அய்யப்பன்தாங்களில் இன்னும் மூன்று மாதங்களில் குடிநீர் வாரியம் சார்பில் குடிநீர் வழங்கும் திட்டம் வந்து விடும்' என, அமைச்சர் தெரிவித்தார். மூவரம்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், ஆலந்துார் தொகுதிக்குட்பட்ட, மூவரசம்பட்டு முதல்நிலை ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் ஊராட்சி தலைவர் ரவி தலைமையில் நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ.,வும், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சருமான அன்பரசன் பங்கேற்றார். கூட்டத்தில் நலச்சங்கத்தினர், பொதுமக்கள் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள்:பரங்கிமலை --- மேடவாக்கம் சலையில் நடந்து வரும் மெட்ரோ ரயில்வே பணி, மூவரசம்பட்டு பகுதியில் செல்கிறது. எனவே, அதற்கு மூவரசம்பட்டு ரயில் நிலையம் என பெயர் வைக்க வேண்டும். மூவரசம்பட்டு ஏரிக்கரையில் நடைபாதை, விளக்கு, இருக்கைகள், பூங்கா என சகல வசதிகளுடன் சீரமைக்க வேண்டும். மூவரசம்பட்டு ஊராட்சியை சென்னை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும்.

ஏகனாபுரம்

கிராமசபை தீர்மானம்ஏகனாபுரம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி வளாகத்தில், நேற்று காலை, 11:00 மணி அளவில், உள்ளாட்சிகள் தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்திற்கு, ஏகனாபுரம் ஊராட்சி தலைவர் சுமதி தலைமை வகித்தார். கிராம சபை கூட்டத்தின் பற்றாளராக உதவிப்பொறியாளர் கயல்விழி முன்னிலை வகித்தார். இதைத் தொடர்ந்து, பரந்துார் விமான நிலைய திட்டத்தை, கிராம சபை நிராகரித்து, 10வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அயப்பாக்கத்தில் சமுதாய வளைகாப்பு

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சி, அறிஞர் அண்ணா எழில்மிகு பசுமை பூங்காவில், மக்கள் நல்வாழ்வுத்துறை, கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ், மருத்துவ முகாம் நேற்று நடந்தது. இதில், 5,000 த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று, 24 விதமான இலவச பரிசோதனைகளை செய்து பயனடைந்தனர். தமிழக அமைச்சர்கள் சுப்பிரமணியன், நாசர், தி.மு.க., எம்.எல்.ஏ., கணபதி, ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி, திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, அயப்பாக்கம் ஊராட்சி சார்பில் 108 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், கர்ப்பிணிகளுக்கு நலங்கு வைத்து, புடவை, பழங்கள் மற்றும் ஏழு வித உணவு வகைகளுடன் சீர் வழங்கப்பட்டது. அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது.. அயப்பாக்கம் ஊராட்சியை, நகராட்சியாக, தரம் உயர்த்த வேண்டும் என, கலெக்டரிடம் கேட்டுகொள்கிறேன். தமிழகத்தில் மகப்பேறு மரண விகிதம் ஒரு லட்சத்திற்கு, 90 பேராக இருந்தது; தமிழக அரசின் தொடர் நடவடிக்கைகளால், ஒரே ஆண்டில், 52 ஆக குறைந்துள்ளது. நடப்பாண்டில் மகப்பேறு இறப்பு எண்ணிக்கை 39 ஆக உள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் அது பூஜ்யமாக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில் அமைச்சர் நாசர் பேசியதாவது : முன்பெல்லாம், விபத்து நடந்தால், போலீஸ் விசாரணைக்கு பயந்து, நாங்கள் பார்க்கவில்லை என்று கூறுவர். தற்போது, விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு 5,000 ரூபாய் வழங்கப்படுவதால், பலர் தாமாக முன் வருகின்றனர். மருத்துவ சேவை மற்றும் தரப்பிரிவில் மத்திய அரசு வழங்கிய 614 விருதுகளில், தமிழகம் கடந்த மூன்று ஆண்டுகளில் 545 விருதுகளை பெற்றுள்ளது. இந்திய அளவில் வழங்கப்பட்ட 85 மகப்பேறு விருதுகளில், தமிழகம் 55 விருதுகளை பெற்றுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.-- நமது நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை