உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உணவில் தலைமுடி: விமான நிறுவனம் பயணிக்கு ரூ.35,000 வழங்க உத்தரவு

உணவில் தலைமுடி: விமான நிறுவனம் பயணிக்கு ரூ.35,000 வழங்க உத்தரவு

சென்னை: விமானத்தில் வழங்கிய உணவில் தலைமுடி கிடந்ததால் பயணிக்கு, ஏர் இந்தியா நிறுவனம், 35,000 ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த சுந்தர பரிபூரணம் என்பவர், இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து சென்னைக்கு, 'ஏர் இந்தியா' விமானத்தில், 2002ம் ஆண்டு பயணம் செய்தார். அப்போது, அவருக்கு விமானத்தில் வழங்கப்பட்ட உணவில், தலைமுடி கிடந்தது. இதை பார்த்ததும் குமட்டல் ஏற்பட்டது. விமானம் தரையிரங்கியதும், விமான நிறுவன அதிகாரிகளிடம், சுந்தர பரிபூரணம் புகார் அளித்தார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், 11 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மூன்றாவது கூடுதல் சிவில் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பயணிக்கு, ஒரு லட்சம் ரூபாய் வழங்கும்படி, 2022ம் ஆண்டில் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, ஏர் இந்தியா விமான நிறுவனம் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி பி.பி.பாலாஜி விசாரித்தார். அப்போது, 'விமானத்தில் வழங்கப்பட்ட உணவு, ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற சென்னை அம்பாஸ்டர் பல்லவா ஹோட்டலில் தயாரிக்கப்பட்டது. இதற்கு முன் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தது இல்லை என்பதால், இது கவனக் குறைவு அல்ல என்ற அடிப் படையில், உணவை தயாரித்த நிறுவனத்தை வழக்கில் சேர்க்கவில்லை. பயணியுடன் அருகில் இருந்தவரின் தலைமுடிகூட உணவில் விழுந்திருக்க வாய்ப்பு உள்ளது. உணவு சுகாதாரம் இல்லாமல் இருந்ததற்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டது. புகார்தாரர் எவ்வித மருத்துவ உதவியை, விமான நிறுவன ஊழியர்களிடம் கோரவில்லை' என, ஏர் இந்தியா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, 'உணவை தயாரித்தது தனியார் ஹோட்டல் என, தன் பொறுப்பை தட்டி கழிக்க முடியாது எனக்கூறி, சுகாதாரம் இல்லாத உணவு வழங்கிய ஏர் இந்தியா நிறுவனம், பயணிக்கு 35,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அதேநேரம், விசாரணை நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன் என, உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி