ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சி; ஹோட்டல் ஊழியர் சிக்கினார்
சென்னை; அண்ணா நகரில், எஸ்.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயன்ற ஹோட்டல் ஊழியர், நேற்று கைது செய்யப்பட்டார். சென்னை, அண்ணா நகர், டபிள்யூ பிளாக், ஐந்தாவது பிரதான சாலையில், எஸ்.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்., மையம் உள்ளது. நேற்று அதிகாலை 2:30 மணிக்கு, ஏ.டி.எம்., மையத்திற்குள் நுழைந்த 'குல்லா' அணிந்த நபர், கல் மற்றும் இரும்பு கம்பியால் இயந்திரத்தை உடைத்து, பணத்தை கொள்ளையடிக்க முயன்றார். மையத்தில் அலாரம் ஒலித்ததால், பயத்தில் அங்கிருந்து தப்பி ஓடினார். இதனால், பல லட்சம் ரூபாய் தப்பியது. தகவலறிந்து வந்த அண்ணா நகர் போலீசார், ஏ.டி.எம்., மையத்தை சோதித்தபோது, இயந்திரத் தின் முன்பக்கம் சேதமடைந் தது தெரிந்தது. 'சிசிடிவி' கேமரா பதிவுகளை வைத்து, அண்ணா நகரிலேயே பதுங்கிருந்த அந்நபரை, போலீசார் பிடித்தனர். பிடிபட்டவர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார், 19, என்பதும், அண்ணா நகர், இரண்டாவது அவென்யூவில் உள்ள தனியார் ஹோட்டலில் ஊழியராக பணிபுரிவதும் தெரிந்தது. கடன் பிரச்னையில் இருந்த ராம்குமார், மது போதையில் ஏ.டி.எம்.,மில் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக மையத்தை, பல நாட்களாக நோட்டமிட்டுள்ளார். போலீசார், 5 மணிநேரத்தில் கொள்ளையனை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.