சென்னை : ஆலந்துார் ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி, ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த, அரசுக்கு சொந்தமான, 300 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக மீட்டனர். ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு, ஆக்கிரமிப்பு இடத்தில் செயல்பட்டு வந்த சரவண பவன் ஹோட்டலுக்கும், அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.சென்னை பல்லாவரம், புனித தோமையார் மலை கிராமம், ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி, 40,112 சதுர அடி அரசு நிலம் உள்ளது. இந்த நிலம், 90 ஆண்டுகளுக்கு முன் குத்தகைக்கு விடப்பட்டு இருந்தது. குத்தகை காலம் முடிந்த பிறகும், குத்தகைதாரர் நிலத்தை ஒப்படைக்கவில்லை. அந்த இடத்தை குத்தகைதாரர் சட்ட விரோதமாக, சரவண பவன் ஹோட்டலுக்கு வாடகைக்கு விட்டிருந்தார். சத்தமின்றி பிரமாண்ட கட்டடம் எழுப்பி, ஹோட்டல் செயல்பட்டு வந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xlg40w4c&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சில ஆண்டுகளுக்கு முன், ஆலந்துார் பகுதியில் குத்தகை காலம் முடிந்த நிலங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை மீட்கும் முயற்சியில், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டது. அதன்படி, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டன. அதில், ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டியுள்ள, 40,112 சதுர அடி நிலமும் அடக்கம். அவ்வாறு மீட்கப்பட்ட நிலங்கள், அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான கட்டடம் கட்ட ஒதுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, பல ஏக்கர் நிலம் ஆலந்துார் மண்டல அலுவலகம், திருமண மண்டபம், ஹஜ் யாத்திரை செல்வோர் தங்கும் இடம், ஆலந்துார் அரசு கலை, அறிவியல் கல்லுாரி கட்டுவதற்கு என, ஒதுக்கப்பட்டுள்ளது. மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலகம், தற்போது ஆலந்துார் மண்டல அலுவலகத்தில் இயங்கி வருகிறது. அதன் பயிற்சி மற்றும் பரிசோதனை வளாகம், வருவாய் துறையால் மீட்கப்பட்ட, 40,112 அடி அருகில் அமைந்துள்ளது. இதனால், மீட்கப்பட்ட அரசு நிலத்தை, வட்டார போக்குவரத்து அலுவலக வளாகம் கட்ட ஒதுக்கும்படி, மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்தது. இதையடுத்து, அந்த இடமும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு ஒதுக்கப்பட்டது. நில மீட்புக்கு எதிராக, ஆலந்துார் மாவட்ட கூடுதல் உரிமையியல் நிதிமன்றத்தில், சரவண பவன் ஹோட்டல் நிர்வாகம் வழக்கு தொடரப்பட்டது. இதை எதிர்த்து, வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், மாவட்ட நிர்வாகம் வழக்கு நடத்தியது. இந்நிலையில், ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து நிலத்தை மீட்க, நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. அதன்படி, உடனே நிலத்தை மீட்க, வருவாய்துறை அதிகாரிகளுக்கு செங்கல்பட்டு கலெக்டர் சினேகா உத்தரவிட்டார். இதையடுத்து, தாசில்தார்கள் ஆறுமுகம், நடராஜன் உள்ளிட்ட வருவாய் துறையினர், ஜி.எஸ்.டி., சாலையோர ஆக்கிரமிப்பு இடத்திற்கு சென்றனர்.ஆலந்துார் போலீஸ் உதவி கமிஷனர் முரளி தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், நேற்று காலை, கொட்டும் மழையில் ஹோட்டலில் இருந்த ஊழியர்களை வெளியேற்றி, இடத்தை மீட்டனர். பின், பொக்லைன் இயந்திரம் உதவியுடன் உணவகத்தின் பெயர் பலகைகள், முகப்பு பகுதியை அகற்றினர். இரண்டு நுழைவாயிலையும் மூடி, 'சீல்' வைத்தனர். மேற்கொண்டு பிரச்னை வராமல் இருக்க, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மீட்கப்பட்ட அரசு நிலத்தின் மதிப்பு, 300 கோடி ரூபாய். இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், 'நீண்ட காலமாக ஆக்கிரமிப்பில் இருந்த, 300 கோடி ரூபாய் மதிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த இடம், வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்ட, முறைப்படி ஒப்படைக்கப்படும்' என்றார்.