குழந்தைகளை பிரித்து மனைவியை தற்கொலைக்கு துாண்டிய கணவர் கைது
ஓட்டேரி, மனைவியிடம் இருந்து இரு குழந்தைகளையும் பிரித்து, அவரை தற்கொலைக்கு துாண்டிய கணவர் கைது செய்யப்பட்டார். ஓட்டேரியைச் சேர்ந்தவர் ஜமுனா, 24. இவரது கணவர் அம்பத்துாரைச் சேர்ந்த ஜெகதீஷ், 29. இருவரும் ஏழு ஆண்டுகளுக்கு முன், காதலித்து திருமணம் செய்தனர். மனைவியுடன் மாமியார் வீட்டிலேயே ஜெகதீஷ் வாழ்ந்து வந்துள்ளார். தம்பதிக்கு ஆறு மற்றும் ஐந்து வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். மனைவியை சந்தேகப்பட்ட ஜெகதீஷ், மூன்று மாதங்களுக்கு முன், மூத்த மகனை தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். கடந்த 3ம் தேதி இளைய மகனையும், பெரியபாளையம் கோவிலுக்கு செல்வதாக கூறி அழைத்துச் சென்றதோடு, மனைவிக்கு கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று காலை மனைவியை தொடர்பு கொண்ட ஜெகதீஷ் 'நீ செத்துப்போ; அப்போது தான் எனக்கு நிம்மதி' எனக் கூறியுள்ளார். இதனால் விரக்தியடைந்த ஜமுனா, வீட்டில் இருந்த தின்னர் கெமிக்கலை குடித்து, மயங்கி விழுந்துள்ளார். உடனே, அவரது தாய் ஜமுனாவை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரித்த ஓட்டேரி போலீசார், தற்கொலைக்கு துாண்டியதாக ஜெகதீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.