ஐ.ஐ.டி., நீச்சல் போட்டி சென்னையில் துவக்கம்
சென்னை:நாட்டில் உள்ள ஐ.ஐ.டி.,களுக்கு இடையிலான நீச்சல் போட்டிகள், சென்னை ஐ.ஐ.டி.,யில் நேற்று துவங்கின. ஹைதராபாத், திருப்பதி ஐ.ஐ.டி.,களுடன் இணைந்து, சென்னை ஐ.ஐ.டி., விளையாட்டு போட்டியை நடத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக நேற்று, நீர் விளையாட்டு போட்டிகள், சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் உள்ள நீச் சல் குளத்தில் துவங்கின. வரும் 5ம் தேதி வரை நடக்க உள்ள இந்த போட்டி களை, ஒலிம்பிக் நீச்சல் வீரரும், 'அர்ஜுனா' விருது பெற்ற வருமான செபாஸ்டியன் சேவியர் துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், ''இந்தியா, நீச்சல் துறையில் மிகவும் வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த 1980களில், சென்னை ஐ.ஐ.டி., நீச்சல் குளத்தில் பயிற்சி பெற்றவன். எங்கள் ஊரில், நீச்சல் குளங்கள் கிடையாது. ஆற்றில்தான் நீச்சல் கற்றுக்கொண்டேன். அதுதான் என்னை ஒலிம்பிக் பதக்கத்தின் முன் நிறுத்தியது,'' என்றார். நிகழ்ச்சியில், சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காம கோடி, 'டீன்' சத்தியநாராயணா என்.கும்மாடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த போட்டிகளில், நாட்டில் உள்ள 17 ஐ.ஐ.டி.,களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனையர் பங்கேற்கின்றனர். இதன் நிறைவு போட்டிகள், டிசம்பரில் நடக்கும். மாணவ - மாணவியர் மட்டுமின்றி, ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கான நீச்சல் போட்டிகளும் நடத்தப்பட்டு, தனித்தனியாக பரிசுகள் வழங்கப்படும். ஒட்டுமொத்தமாக அதிக புள்ளிகளை பெறும் ஐ.ஐ.டி.,க்கு, இந்தாண்டுக்கான சாம்பியன்ஷிப் விருது வழங்கப்படும்.