அடுக்குமாடி குடியிருப்பில் முறைகேடாக மின் இணைப்பு
சென்னை, சென்னை, ராஜிவ்காந்தி சாலை கொட்டிவாக்கத்தில், அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனம், 1,000க்கும் மேற்பட்ட வீடுகளை உள்ளடக்கிய பன்னடுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தை கட்டி வருகிறது.இந்நிறுவனம், ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனி மின் இணைப்பு கேட்டு, மின் வாரியத்திடம் விண்ணப்பித்துள்ளது. அதற்கு உரிய கட்டணத்தையும் செலுத்தியுள்ளது.மின் இணைப்பு வழங்குவதற்கு, குடியிருப்பு வளாகத்தில் நான்கு மின் வினியோக மின்மாற்றிகள் நிறுவ வேண்டும். இதற்கு இடம் ஒதுக்குவதில் பிரச்னை நிலவுவதால், மின் இணைப்பு கோரிய விண்ணப்பங்களுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை.இந்நிலையில், ஒரு மின்மாற்றியை நிறுவி முறைகேடாக, 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மீட்டர் பொருத்தப்பட்டு, மின் வினியோகம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு, சில மின் வாரிய அதிாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர்.முறைகேடாக மீட்டர் வழங்கப்பட்டிருப்பதை, மின் வாரிய அமலாக்க பிரிவினர் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். இதற்கான அபராத தொகையாக 35 லட்சம் ரூபாயை, கட்டுமான நிறுவனம் செலுத்தியுள்ளது.