சட்டவிரோத கழிவுநீர் இணைப்பு ஆவடியில் 260 இடத்தில் துண்டிப்பு
ஆவடி: ஆவடியில், 260 இடங்களில் சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, 29,990 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயில் ஏழாவது வார்டுக்கு உட்பட்ட அண்ணா தெருவில், மாநகராட்சிக்கு தெரியாமல் சட்டவிரோதமாக கொடுக்கப்பட்ட கழிவுநீர் இணைப்பால், ஆறு மாதமாக சாலையில் கழிவுநீர் தேங்கி, பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதையடுத்து, சட்டவிரோத கழிவுநீர் இணைப்பை துண்டித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்தது. அதன்படி, கடந்த மூன்று தினங்களாக ஆவடி மாநகராட்சி சார்பில், 7, 8, 9வது வார்டுகளுக்கு உட்பட்ட தென்றல் நகர் கிழக்கு, வெங்கடாசலம் நகர், அன்னை தெரசா நகர், எட்டியம்மன் நகர், மாசிலாமணீஸ்வரர் நகர் உட்பட 500க்கும் மேற்பட்ட தெருக்களில் உள்ள 1,490 வீடுகளில், அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஏழாவது வார்டில் 75 இணைப்புகள், எட்டாவது வார்டில் 115 இணைப்புகள், ஒன்பதாவது வார்டில் 70 இணைப்பு என, 260 சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு துண்டிக்கப்பட்டன. மேலும், வீட்டு உரிமையாளர்களுக்கு 29,900 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த பணி, ஒவ்வொரு வார்டிலும் தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.