உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இ.சி.ஆரில் குற்றங்கள் அதிகரிப்பு ரோந்து பணி தீவிரப்படுத்த கோரிக்கை

இ.சி.ஆரில் குற்றங்கள் அதிகரிப்பு ரோந்து பணி தீவிரப்படுத்த கோரிக்கை

சென்னை, சென்னையில் முக்கிய சாலையாக, இ.சி.ஆர்., என்ற கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. இங்குள்ள, நீலாங்கரை, கானத்துார் காவல் நிலைய எல்லையில், ரிசார்டுகள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் அதிகளவில் உள்ளன.அதோடு, இ.சி.ஆரில் இருந்து கடற்கரை செல்லும் வகையில், 40க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இதில், 10க்கும் மேற்பட்ட தெருக்கள் வழியாக கடற்கரைக்கு, உள்ளூர், வெளியூர் சுற்றுலா பயணியர் அதிக அளவில் செல்வர்.மீதமுள்ள தெருக்கள் வழியாக, நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்வோர் மற்றும் தம்பதிகள், நண்பர்கள், காதலர்கள் என குறைவான கூட்டம் இருக்கும். இதில், சிலரிடம் வழிப்பறி, போதையில் சில்மிஷம் செய்வது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.குறிப்பாக, ரிசார்டுகளில் போதையில் மிதக்கும் சிலர், கடற்கரைக்கு சென்று பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபடும் சம்பவங்களும் நடந்துள்ளன.இதேபோல், கிழக்கு கடற்கரை சாலையிலும், நள்ளிரவில் போதை நபர்களால் அசம்பாவித சம்பவங்கள் நடக்கின்றன. பெண்கள் மட்டும் செல்லும் கார்களை துரத்தும் சம்பவங்களும் நடந்துள்ளன.கடற்கரை பகுதி முழுவதையும் கண்காணிக்க, போதிய போலீசார் இல்லாததால் கானத்துார் மற்றும் நீலாங்கரை காவல் நிலையங்கள் தடுமாறுகின்றன.நீலாங்கரை, பனையூர் பகுதியில் முக்கிய அரசியல் தலைவர்கள், முன்னாள், இன்னாள் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் இருப்பதால், அவர்கள் சார்ந்த பாதுகாப்பு, கண்காணிப்பு பணிகளில், இருக்கிற போலீசார் தீவிரம் காட்ட வேண்டி உள்ளது. மீதமுள்ள போலீசாரால், பொதுமக்கள் பாதுகாப்பில் தீவிரம் காட்ட முடியவில்லை.அதேபோல், கடற்கரைக்கு செல்லும் ஒவ்வொரு தெருக்களிலும், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும் என, இரு ஆண்டுகளுக்கு முன், காவல் உயர் அதிகாரிகள் கூறினர். ஆனால், அந்த பணி இன்னும் முழுமை அடையவில்லை. இதனால், குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவோரை பிடிப்பதில், போலீசாருக்கு பெரிய சவாலாக உள்ளது. இதனால், இ.சி.ஆரில் ரோந்து பணியை தீவிரப்படுத்தி, மக்கள் அச்சம் இல்லாமல் கடற்கரைக்கு செல்லும் வகையில், காவல் துறை தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை