இந்திய ரோபோ உதவியுடன் எம்.ஜி.எம்.,மில் அறுவை சிகிச்சை
சென்னை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரோபோ சாதனத்தின் உதவியுடன், 69 வயது நோயாளிக்கு 'ப்ராஸ்ட்ரேட்' என்ற ஆண்மைச்சுரப்பியை அகற்றி, அடையாறு எம்.ஜி.எம்., மலர் மருத்துவமனை, மறுவாழ்வு அளித்துள்ளது. இது குறித்து, இம் மருத்துவமனையின் சிறுநீர் பாதையியல், புற்றுநோயி யல், 'ரோபோட்டிக்' அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நிபுணர் வசந்தராஜா ராமசாமி கூறியதாவது: கடந்த இரு ஆண்டு களாக சிறுநீர் கழிப்பதில் சிரமத்துடன், 69 வயது முதியவர் அவதிப்பட்டு வந்தார். ஆரம்பக்கட்ட பரிசோதனையில், ஆண்மை சுரப்பி பெரிதாகி, சிறுநீர் பாதையை அடைத்திருப்பது கண்டறியப்பட்டது. இவருக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 'எஸ்.எஸ்.ஐ., மந்திரா' என்ற ரோபோ உதவியுடன், அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டது. வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட ரோபாவை விட, இந்தியாவில் தயாரிக்கப்படும் ரோபோ கருவிகளை பலமுறை பயன்படுத்த முடியும். இந்நோயாளிக்கு சிறுநீர் கசிவு பாதிப்பும் இருந்தது. எனினும், சிக்கலான அறுவை சிகிச்சையை, ரோபோ உதவியுடன் செய்யப்பட்டது. அதன்படி, விரைந்து குணமடைந்த நோயாளி, 36 மணி நேரத்தில் வீடு திரும்பினார். இவ்வாறு அவர் கூறினார்.