கவுரவ விரிவுரையாளர்கள் நேர்முக தேர்வு அதிகாரி வருகை தாமதத்தால் குளறுபடி
சென்னை, கவுரவ விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான நேர்முக தேர்வு, இணை இயக்குநர் வருகை தாமதத்தால் குளறுபடியானது. நேர்முக தேர்வுக்கு வந்தவர்கள் பல மணி நேரம் காத்திருந்தனர். தமிழகத்தில் உள்ள அரசு கல்லுாரிகளில், மேலும் 574 கவுரவ விரிவுரையாளர்களை நியமிப்பதற்கான நேர்முக தேர்வு, மண்டலம் வாரியாக கடந்த, 18ம் தேதி துவங்கியது. சென்னை மண்டலத்தில் உள்ள, அரசு கல்லுாரிகளில், 80 கவுரவ விரிவுரையாளர்கள் பணிக்கான நேர்காணல், சைதாப்பேட்டையில் உள்ள மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. காலை வரலாறு பாடத்திற்கும், மாலை விலங்கியல் பாடத்திற்கும் நேர்முக தேர்வு நடந்தது. இதில், வரலாறு பாடத்திற்கான நேர்முக தேர்வு காலை 9:00 மணிக்கு துவங்கும் என, விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த தேர்வு நான்கு மணி நேரம் தாமதமாக மதியம் 1:00 மணிக்கு துவங்கியது. மதியம் பங்கேற்றவர்களுக்கான தேர்வு, மாலை வரை நீடித்தது. இதனால், நேர்முக தேர்வுக்கு வந்த, 45க்கும் மேற்பட்டோர், பல மணிநேரம் காத்திருந்து வேதனைக்கு ஆளாகினர். இதுகுறித்து, நேர்முக தேர்வில் பங்கேற்றோர் கூறியதாவது: இணை இயக்குநர் வர தாமதம் ஆனதால், நேர்முக தேர்வுக்கு வந்தோர் பல மணி நேரம் வீணாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. தண்ணீர் உட்பட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்துதரப்படவில்லை. இந்த நேர்முக தேர்வில் குளறுபடிகளே அரங்கேறியது. யு.ஜி.சி., நெட் தேர்வு முடித்தவர்களை, அலுவலர்கள் மிகவும் மோசமாக நடத்தினர். இனி வரும் நாட்களில், குளறுபடிகள் இன்றி, நேர்முக தேர்வை நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.