சென்னையில் நேற்று பெய்த சாதாரண மழைக்கே, பல்வேறு இடங்களிலும் வெள்ளக்காடானது. மெட்ரோ ரயில் பணிகளால் சாலைகள் பழுது, அரைகுறையாக விடப்பட்ட வடிகால்வாய் பணிகள், தாழ்வாக தொங்கும் மின் கம்பிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை இன்மை என, நாலாபுறமும் பிரச்னைகளால் மாநகராட்சி திணறி வருகிறது. பருவமழை துவங்க உள்ள நிலையில், முன்பு போல சென்னை தத்தளித்து விடுமோ என, மக்கள் பீதியில் உள்ளனர். சென்னை மாநகராட்சியில், 3,040 கி.மீ., நீளத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில், உலக வங்கி, ஜப்பான் வளர்ச்சி நிதி உள்ளிட்டவற்றின் வாயிலாக மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. இத்துடன், 'கோர் சிட்டி' எனப்படும் பழைய சென்னை பகுதிகளில், பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மழைநீர் வடிகால் அகற்றப்பட்டு, புதிய வடிகால் அமைக்கும் பணி சில பகுதிகளில் நடந்து வருகிறது. மேலும், பிரதான சாலைக்கு உட்புற சாலைக்குமான இணைப்புகள் இல்லாத பகுதிகளிலும், மாநகராட்சி மழைநீர் வடிகால் இணைப்புகள் ஏற்படுத்தி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மழைநீர் வடிகால் கட்டமைப்புக்கு, சென்னை மாநகராட்சி குறைந்தது, 300 கோடி முதல் 1,000 கோடி ரூபாய் வரை செலவிட்டு வருகிறது. இவ்வளவு கோடி ரூபாயில் பணிகள் நடந்தாலும், ஒவ்வொரு பருவமழைக்கும் சென்னையில் ஏதேனும் ஒருபகுதியில் மக்கள் வெள்ளத்தில், ஒருவாரம் வரை சிக்கி தவிக்கின்றனர். அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில், சென்னையில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை மாநகராட்சிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஆனால், நேற்று அதிகாலையில் பெய்த மழைக்கே, கோடம்பாக்கம், அம்பத்துார், அண்ணாநகர் என, பல மண்டலங்களில் தெருக்களில் மழைநீர் தேங்கியது. மந்தைவெளி பஸ் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது. சில இடங்களில், ஒரு அடிக்கு மேல் மழைநீர் தேங்கி, அப்பகுதி மக்களை பாதிப்படைய செய்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும், மாநகராட்சியின் 1913 என்ற புகார் எண்ணிக்கு, 10க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கியதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன. தொடர்ந்து ஓரிரு நாட்கள் மழை இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், சென்னையில் பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. காரணம் என்ன? மெட்ரோ ரயில் பணிகளால் சாலைகள் பழுது, அரைகுறையாக விடப்பட்ட வடிகால்வாய் பணிகள், தாழ்வாக தொங்கும் மின் கம்பிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை இன்மை என, நாலாபுறமும் பிரச்னைகள் உள்ளதால், மாநகராட்சி செய்வதறியாமல் திணறி வருகிறது. அடுத்த மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், கடந்த 2015ல் போல் சென்னை மீண்டும் தத்தளித்து விடுமோ என, மக்கள் பீதியில் உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மாநகராட்சி வேகப்படுத்த வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர். மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னை நகரம் சமதளப் பகுதியாக கொண்டிருப்பதால், மழைநீர் இயல்பாகவே தானாக வடிய வழியின்றி, தாழ்வான பகுதிகளில் தேங்கி விடுகிறது. இதற்காக அனைத்து பகுதிகளிலும், மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால், நெடுஞ்சாலை துறையின் மேம்பால பணி, மெட்ரோ ரயில் பணி உள்ளிட்டவற்றால், அண்ணா சாலை, ஆற்காடு சாலை உள்ளிட்ட பல்வேறு பிரதான சாலைகளில் மழைநீர் வடிகால் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாகவும் அதிகளவு மழை பொழிவு இருக்கும்போது, வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது. நேற்று அதிகாலையில் கனமழை பெய்தது. சில இடங்களில் வடிகால்களில் குப்பை தேங்கி அடைப்பை ஏற்படுத்தியதால், சில தெருக்களில் மழைநீர் தேங்கியதாக புகார் அளிக்கப்பட்டது. புகாரின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. மழை காலங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக, அனைத்து மின் இணைப்பு பெட்டி, டிரான்ஸ்பார்மர் ஆகிய பகுதிகளில், பாதுகாப்பு தடுப்பு வேலிகளை மாநகராட்சி அமைத்து வருகிறது. தாழ்வாக தொங்கும் மின்கம்பிகள் கண்டறிந்து தீர்வு காணப்படும். மழை வெள்ள பாதிப்பை தடுக்க பல்வேறு சவால்கள் இருந்தாலும், தொடர்ந்து மாநகராட்சி பணியாளர்கள், 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர். நீர் தேக்கத்தை தடுக்க, 500க்கும் மேற்பட்ட மோட்டார்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
கடவுளை நம்புவோம்
மழைக்கால பாதிப் பை தடுப்பது தொடர்பான ஆய்வு கூட்டம், மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் சமீபத்தில் நடந்தது. அதில், மேயர், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். தென்மேற்கு பருவ மழை அதிகம் பெய்தது, வடகிழக்கு பருவமழையும் அதிகம் பெய்தால், எப்படி சமாளிப்பது என ஆலோசிக்கப்பட்டது. அப்போது, 'சட்டசபை தேர்தல் வர உள்ளது. வெள்ள பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டும். தற்போதைய சூழலில், கடவுளையும், கடலையும் நம்புவதை தவிர வேறு ஏதும் வழியில்லை' என, உயர் அதிகாரிகள், மேயர் முன்னிலையில் புலம்பி தீர்த்துள்ளனர்.- நமது நிருபர் -