உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஏரியை ஆக்கிரமித்து மேம்பாட்டு பணி வேலியே பயிரை மேய்வதா? அரசு மீது வேளச்சேரி மக்கள் அதிருப்தி

ஏரியை ஆக்கிரமித்து மேம்பாட்டு பணி வேலியே பயிரை மேய்வதா? அரசு மீது வேளச்சேரி மக்கள் அதிருப்தி

சென்னை : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், வேளச்சேரியில் ஏரி ஆக்கிரமிப்புக்களை அகற்ற அரசுத்துறைகள் ஆர்வம் காட்டாமல் உள்ளன. இந்த சூழலில், வேலியே பயிரை மேயந்த கதையாக, 'பூங்கா அமைக்கிறோம்' என, ஏரியை மேலும் ஆக்கிரமித்து, சி.எம்.டி.ஏ., பணிகளை மேற்கொண்டு வருது, வேளச்சேரி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.சென்னையின் முக்கிய ஏரியாக வேளச்சேரி ஏரி உள்ளது. மொத்தம் 265 ஏக்கர் பரப்பில் இருந்த இந்த ஏரி, ஆக்கிரமிப்பில் சிக்கி தற்போது, 53 ஏக்கராக சுருங்கிவிட்டது. இதில், தனியார் மட்டுமின்றி, அரசு திட்டங்கள், சாலை விரிவாக்கம் காரணமாகவும் ஏரி சுருங்கிவிட்டது.ஏரியின் அனைத்து திசைகளில் இருந்தும் கழிவுநீர் விடுவதால், ஏரி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, உயர் நீதிமன்றம், பசுமை தீர்ப்பாயம் ஆகியவை உத்தரவிட்டும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. அரசியல்வாதிகளின் அழுத்தமே இதற்கு முக்கிய காரணம்.

இந்நிலையில், சி.எம்.டி.ஏ.,வும் வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில், ஏரியை கபளீகரம் செய்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமமான சி.எம்.டி.ஏ., சார்பில், 19.40 கோடி ரூபாயில், ஏரியில் படகு சவாரியுடன், 1.91 ஏக்கர் பரப்பில் பூங்கா அமைக்கும் பணி, கடந்த ஆண்டு அக்டோபரில் துவங்கியது.ஏரியின் வடக்கு பகுதியில் கரை பலப்படுத்தும் பணி நடக்கிறது. இதற்காக, ஏற்கனவே இருந்த நடைபாதை அகற்றப்பட்டுவிட்டது.அதே அளவில் கரையை பலப்படுத்தாமல், ஏரிக்குள் 10 அடி வரை ஆக்கிரமித்து, கான்கிரீட் போடும் பணி நடந்து வருகிறது. ஏரியை பாதுகாக்க வேண்டிய அரசுத்துறை நிர்வாகங்களே, ஆக்கிரமிப்பது சரியா என, வேளச்சேரி பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இதுகுறித்து, வேளச்சேரி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசிப்போர் கூறியதாவது:வேளச்சேரி ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்; ஏரியை துார் வாரி ஆழப்படுத்தி, விரிவாக்கம் செய்ய வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டுத்தான், சி.எம்.டி.ஏ., பணிகளை துவக்கியிருக்க வேண்டும். மாறாக, ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியை அத்துறையே ஆக்கிரமித்து, மேம்பாட்டு பணிகளை மேற்கொள்கிறது.அதுவும், இருந்த ஆக்கிரமிப்பையும் தாண்டி, ஏரிக்குள் 10 அடிக்மேல் ஆக்கியரமிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு ஒரு நியாயம், சி.எம்.டி.ஏ.,வுக்கு ஒரு நியாயமா.கரை பகுதியில் மேம்பாட்டு பணிகள் செய்வதில் குறியாக இருக்கின்றனரே தவிர, ஏரியில் துார் வாரவில்லை. 'ஏரியால் நிலத்தடிநீர்மட்டம் உயராது; அழகுப்படுத்துகிறோம்' என்ற பெயரில், ஏரியை ஆக்கிரமித்து மேம்படுத்தும் பணியை கைவிட வேண்டும். இதுகுறித்து, எம்.பி., - எம்.எல்.ஏ., - கவுன்சிலர்களிடம் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

பெரிதாக ஆக்கிரமிக்கலை

சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:நடைபாதை இருந்த இடத்தையே பலப்படுத்தி வருகிறோம். ஏரிக்குள் பெரிய அளவில் ஆக்கிரமித்து பணி செய்யவில்லை. சுற்றியுள்ள ஆக்கிரமிப்பை அகற்றினால் தான், ஒதுக்கீடு செய்த நிதிக்கான முழு பயன் கிடைக்கும்.தேர்தல் நெருங்குவதால், ஆக்கிரமிப்புகளை அகற்ற வாய்ப்பில்லை. இதனால், இருக்கிற இடத்திற்கு ஏற்ப மேம்பாட்டு பணிகள் செய்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

3 ஏக்கர் குளத்தை

துார்த்த சி.எம்.டி.ஏ.,செங்கல்பட்டு போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், ஆலப்பாக்கம் ஊராட்சி, மலையடி வேண்பாக்கம் கிராமத்தில், புதிய புறநகர் பேருந்து நிலைய பணிகளை, 2023 நவ., 15ல் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.அரசு மருத்துவக் கல்லுாரிக்கு சொந்தமான, 9.95 ஏக்கர் நிலத்தில், 130 கோடி ரூபாயில் பணிகள் நடந்து வருகின்றன.பணி துவங்கியபோது, இந்த பகுதியில் இருந்த, 3 ஏக்கருக்கு மேல் குளத்தையும், மண் போட்டு, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் மூடி விட்டனர்.நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவை மீறி, குளம் துார்க்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.குளத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் செயலர் பிரகாஷ் கூறுகையில், ''புறநகர் பேருந்து நிலையத்தில் குளம் துார்க்கப்பட்டதாக புகார்கள் வந்துள்ளன. குளம் முறையாக பராமரிக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை