| ADDED : ஜன 13, 2024 12:04 AM
கீழ்ப்பாக்கம்,நடைபாதையில், அத்துமீறி கொட்டப்பட்டுள்ள கட்டடக் கழிவுகளால், பாதசாரிகள் அவதிப்படுகின்றனர்.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், பாதசாரிகள் பயன்பாட்டிற்காக, அகலமான நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.இந்த நடைபாதையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க, தடுப்பு கற்கள் அமைக்கப்பட்டன. பாதசாரிகளுக்காக இப்படி பல்வேறு வகையில் நடவடிக்கை மேற்கொண்டாலும், நடைபாதைகள் ஆக்கிரமிப்பிற்கு விடிவு கிடைப்பதில்லை.அண்ணா நகர் மண்டலம் கீழ்ப்பாக்கத்தில், ஹார்லி சாலை பகுதி உள்ளது. இங்குள்ள பிரதான சாலை நடைபாதையில் அத்துமீறி, தனியார் கட்டடத்தில் இருந்து எடுக்கப்பட்ட கட்டடக் கழிவுகள் மற்றும் குப்பையை கொட்டி வைத்துள்ளனர்.இதுகுறித்து, அப்பகுதியில் வசிப்போர் கூறியதாவது:ஹார்லி சாலையில், கடந்த இரண்டு மாதங்களாக நடைபாதையில், போக்குவரத்திற்கு இடையூறாக கட்டடக் கழிவுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் கேட்டால், அநாகரிகமாக பேசுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை.இதன் அருகில் பள்ளி மற்றும் பேருந்து நிறுத்தம் இருப்பதால், அவ்வழியாக நடந்து செல்ல முடியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.