ரோஜ்கர் மேளா திட்டத்தில் 116 பேருக்கு பணி ஆணை
ஷெனாய் நகர்: மத்திய அரசின், 'ரோஜ்கர் மேளா' திட்டத்தில், தபால் துறையில் 24 பேர் உட்பட பல துறைகளில் 116 பேருக்கு, பணி நியமன ஆணைகள் நேற்று வழங்கப்பட்டன. மத்திய அரசு சார்பில், பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பை வழங்கும், 'ரோஜ்கர் மேளா' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 17வது கட்டமாக நேற்று, தமிழகம் உட்பட நாடு முழுதும், 40 இடங்களில், 51,000 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. சென்னை, ஷெனாய் நகரில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் பேசிய பின், 116 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. தபால் துறைக்கு தேர்வான 24 பேருக்கு, சென்னை நகர, அஞ்சல் துறை தலைவர் நடராஜன், அஞ்சல் சேவை இயக்குநர் தேவராஜ், இயக்குநர் மனோஜ் ஆகியோர், பணி ஆணையை வழங்கினர். தொடர்ந்து, ஜி.எஸ்.டி., - கஸ்டம்ஸ், ரயில்வே, பெட்ரோலியம் உள்ளிட்ட எட்டு துறைகளில் தேர்வாகிய 92 பேருக்கும், அந்தந்த துறை உயர் அதிகாரிகள் பணி ஆணையை வழங்கினர்.