உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆக்கிரமிப்பால் திணறும் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதி  நிம்மதி தேடி வரும் பக்தர்கள் அவதி  நிரந்தர தீர்வு காணுமா மாநகராட்சி?

ஆக்கிரமிப்பால் திணறும் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதி  நிம்மதி தேடி வரும் பக்தர்கள் அவதி  நிரந்தர தீர்வு காணுமா மாநகராட்சி?

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் புற்றீசலாக முளைத்து வரும் நடைபாதை கடைகள் மற்றும் போதிய பார்க்கிங் வசதி இல்லாததால், நிம்மதி தேடி வரும் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். பக்தர்கள் நலனை கருத்தில் வைத்து இதற்கு நிரந்தர தீர்வு காண மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது. பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்களின் வருகைக்கேற்ப போதிய பார்க்கிங் வசதி இல்லாதது, இன்றளவு பெரும் குறையாகவே உள்ளது. இதனால், கோவில் கிழக்கு மாடவீதியை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்த வேண்டிய சூழல் உள்ளது. வடக்கு மற்றும் தெற்கு மாடவீதியில் வணிக நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவற்றுக்கு, 'பார்க்கிங்' வசதி இல்லை. அங்கு வரும் வாடிக்கையாளர்களும், தங்களின் வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி செல்கின்றனர். இது ஒருபுறம் இருக்க, கோவிலுக்கு வரும் பக்தர்களை குறிவைத்து, ஏராளமான நடைபாதை கடைகளும் புற்றீசலாக முளைத்துள்ளன. இதனால், பக்தர்களால் நடந்து செல்லவே முடியாத நிலை உள்ளது. போக்குவரத்தும் ஸ்தம்பித்து விடுகிறது. எனவே, ஆக்கிரமிப்பு நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும்; வாகன நிறுத்தத்திற்கு கூடுதல் இடம் ஏற்படுத்தி தர வேண்டும் என, பக்தர்கள் சார்பில் பலமுறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பக்தர்கள் கூறியதாவது: பக்தர்கள் நிம்மதி தேடித் தான் கோவிலுக்கு வருகின்றனர். வாகனங்களை 'பார்க்கிங்' செய்வதற்குள், பெரும்பாடு படுகின்றனர். இதே நிலை நீடித்தால், கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து போய்விடும். அந்த அபாயத்தை தடுக்க வேண்டியது அறநிலையத்துறையின் கடமை. எனவே, இதற்கு நிரந்தர தீர்வு காண, அறநிலையத்துறை, போக்குவரத்து போலீசார் மற்றும் மாநகராட்சி இணைந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். திருநங்கையர் தொல்லை கோவிலுக்கு வெளிநாடுகளில் இருந்து, தினமும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். வெளிநாட்டினர் மற்றும் பக்தர்களை குறிவைத்து பணம் பறிக்கும் நோக்கில், திருநங்கையர் கும்பல் ஒன்று சுற்றி வருகிறது. அவர்கள் 'திருஷ்டி' கழிப்பதாகவும், 'ஆசி' வழங்குவதாகவும் கூறி, கணிசமான தொகையை முரண்டு பிடித்து பறித்து செல்கின்றனர். பணம் கொடுக்காவிடில், பக்தர்களை சூழ்ந்து தொல்லை கொடுத்து, பணம் கிடைக்கும் வரை நச்சரித்து விடுவர். இதை போலீசாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. கட்சியினர் 'பாதுகாப்பு' இது குறித்து போக்குவரத்து போலீசார் கூறுகையில், 'வாகன போக்குவரத்திற்கு இடையூறாக, கடைகள் அமைக்கப்பட்டுள்ளது தொடர்பாக, ஒவ்வொரு முறை புகார் வரும்போதும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆனால், ஆக்கிரமிப்பாளர்களுக்கு அரசியல் கட்சியினர் பாதுகாப்பாக உள்ளனர். இதற்கான நிரந்தர தீர்வை, மாநகராட்சி தான் எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

N S
நவ 07, 2025 10:11

"கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து போய்விடும். அந்த அபாயத்தை தடுக்க வேண்டியது அறநிலையத்துறையின் கடமை." அறநிலையத்துறையின் தொல்லையால் ஏற்கனவே குறைந்து விட்டது. "கபாலி தான் காப்பாற்றவேண்டும்". புளியந்தோப்பு கபாலி இல்லை இறைவன் கபாலி.


kumar
நவ 07, 2025 01:32

போலீஸ் "ஒவ்வொரு முறை புகார் வரும்போதும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்." முதல் தடவையே கடுமையான நடவடிக்கை எடுத்தால் ஏன் திரும்பவும் நடக்கிறது ? நடவடிக்கை எடுத்த மாதிரி எடுத்து , லஞ்சம் வாங்கிக்கொண்டு ஆக்ரமிப்பாளர்களை விட்டு விடுவதால் தான் தொடர்ந்து இது நடக்கிறது . போலீஸ் : " ஆனால், ஆக்கிரமிப்பாளர்களுக்கு அரசியல் கட்சியினர் பாதுகாப்பாக உள்ளனர். " அப்படி என்றால் அரசியல் கட்சி பாதுகாப்பு இருந்தால் நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று காவல் துறை கூறுகிறது . நகரத்திலும் , மாநிலத்திலும் சட்டம் ஒழுங்கு ஏன் சீர் கேட்டு போயிருக்கிறது என்று இப்போது தெரிந்ததா ? இதை சொல்ல நகர காவல் துறை வெட்க படவேண்டும் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை