கழிவுகளை ஏரியில் கொட்டிய கர்நாடக லாரிக்கு அபராதம்
புழல்,புழல், எம்.ஜி.ஆர். நகர் அருகே உள்ள இரட்டை ஏரி சர்வீஸ் சாலையில், நேற்று காலை கர்நாடக மாநில பதிவெண் கொண்ட லாரியில் இருந்து பூசணிக்காய் கழிவுகளை, இருவர் ஏரி ஓரமாக கொட்டினர்.இதைப்பார்த்த எம்.ஜி.ஆர். நகர் குடியிருப்புவாசி ஒருவர், குடியிருப்பு சங்கத் தலைவர் மனோகரனுக்கு தகவல் அளித்தார். அங்கு கழிவுகளை கொட்டிய லாரியை மனோகரன் படம் பிடித்து, மாநகராட்சியினர் மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்தார்.மாநகராட்சி அதிகாரிகள் வந்து, கொட்டப்பட்ட கழிவுகளை மீண்டும் அள்ள வைத்து, கழிவுகளை கொட்டியவர்களுக்கு அபராதமும் விதித்தனர்.இதுகுறித்து மனோகரன் கூறுகையில், ''ஏரி உள்ளிட்ட பொது இடங்களில் கழிவுகளை கொட்டுவோர் யாராக இருந்தாலும், பார்ப்பவர்கள் உரிய தகவல் தர வேண்டும். அப்போது தான் நம்மை சுற்றியுள்ள பகுதிகளும், நம் வீட்டைப் போல் சுகாதாரமாக இருக்கும். சம்பந்தப்பட்ட லாரியை மாநகராட்சி அதிகாரிகள் வசம் ஒப்படைத்து விட்டோம்,'' என்றார்.