டியூஷன் செல்வதாக கொடைக்கானல் டூர் ஆவடி சிறுவர்கள் வத்தலக்குண்டுவில் மீட்பு
ஆவடி, ஆவடி அடுத்த அயப்பாக்கம் பகுதியிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 11 மற்றும் 12 வயதுடைய நான்கு சிறுவர்கள், நேற்று முன்தினம் மாலை, 'டியூஷன்' சென்றுள்ளனர். நீண்ட நேரம் கழித்தும் வீடு திரும்பாததால், அவர்களின் பெற்றோர், திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.உடனே, ஆய்வாளர் மில்லர் ஜார்ஜ் தலைமையிலான தனிப்படை போலீசார், சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சியை ஆய்வு செய்தனர். அதில், நான்கு சிறுவர்களும் புத்தக பையுடன், அயப்பாக்கத்திலிருந்து ஆட்டோவில் ஏறி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்றது தெரிந்தது.பின் அங்கிருந்து, கொடைக்கானல் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறிச் சென்றது, கண்காணிப்பு கேமராவில் தெரிந்தது.போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் விசாரித்த போது, இரவு 11:00 மணியளவில் அந்த பேருந்து திண்டிவனம் கடந்து செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து, விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும், திருச்சி போலீசாருக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் தனிப்படை போலீசார், இரண்டு பெற்றோருடன் அந்த பேருந்தை காரில் பின்தொடர்ந்து சென்றனர்.இந்நிலையில், நேற்று காலை 6:45 மணியளவில், அந்த பேருந்து மதுரையைத் தாண்டி செல்வது தெரிந்தது. அதை பின்தொடர்ந்த போலீசார், காலை 8:30 மணியளவில், கொடைக்கானல் அருகே வத்தலகுண்டு பேருந்து நிலையத்தில், நான்கு சிறுவர்களையும் பத்திரமாக மீட்டனர்.விசாரணையில், அயப்பாக்கம் பகுதியிலுள்ள பல்வேறு தனியார் பள்ளிகளில் படிக்கும் இவர்கள், ஒன்றாக டியூஷன் படித்து வந்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களாக, கொடைக்கானல் சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளனர். அதற்காக நான்கு பேரும் குறிப்பிட்ட தொகையை பங்கிட்டு, நேற்று முன்தினம் இரவு, யாருக்கும் கூறாமல் கொடைக்கானல் கிளம்பியது தெரிந்தது. காணாமல் போனதாக கூறப்பட்ட சிறுவர்களை, விரைந்து மீட்ட போலீசாரின் செயலை, அனைவரும் பாராட்டி வருகின்றனர்.