போலீஸ் தாக்கியதில் கூலித்தொழிலாளி மரணம் எஸ்.ஐ., உட்பட மூன்று போலீசாருக்கு ஆயுள்
சென்னை: கோட்டூர்புரத்தில் போலீசார் தாக்கியதில், கூலித்தொழிலாளி மரணமடைந்த வழக்கில், எஸ்.ஐ., உட்பட மூன்று போலீசாருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோட்டூர்புரத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன் என்பவரின் மகன் பழனி, 36; கூலித்தொழிலாளி. கடந்த 2009 மார்ச் 13ம் தேதி குடித்துவிட்டு தொந்தரவில் ஈடுபட்டதாக வந்த தகவலை அடுத்து, கோட்டூர்புரம் போலீசார், பழனியை விசாரணைக்கு அழைத்து சென்றனர். பின், மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்ல முயன்றபோது, போலீசார் பிடியில் இருந்து பழனி தப்பியோடினார். அவரை விரட்டி பிடித்த போலீசார், காவல் நிலையத்தில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். பின், ஜாமினில் வீட்டிற்கு அனுப்பினர். வீடு திரும்பிய பழனி உயிரிழந்தார். போலீசார், தன் மகனை கடுமையாக தாக்கியதில் தான் உயிரிழந்தார் என, கோட்டூர்புரம் போலீசில் ரங்கநாதன் புகார் அளித்தார். மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, பழனியின் இறப்பு குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி அறிக்கை அளித்தார். அறிக்கையில், 'கோட்டூர்புரம் எஸ்.ஐ., ஆறுமுகம், ஏட்டுகளான மனோகரன், ஹரிஹர சுப்பிரமணியன், வின்சென்ட, ஏழுமலை ஆகியோர், கடுமையாக தாக்கியதே பழனி உயிரிழப்பிற்கு காரணம்' என, கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, போலீசார் மீது குற்ற வழக்கு பதிவு செய்ய, 2011ல் தமிழக அரசு அனுமதித்து உத்தரவிட்டது. வருவாய் கோட்டாட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில், போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை, சென்னை மாவட்ட ஆறாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், எட்டு ஆண்டுகளாக நடந்து வந்தது. போலீசார் தரப்பில், மாநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தேவபிரசாத் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி வி.பாண்டியராஜ் பிறப்பித்த உத்தரவு: வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் அல்ல. அவர்கள், நீண்ட காலமாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து உள்ளனர். இவர்கள், சட்டம் - ஒழுங்கை பராமரிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு, தங்கள் வரம்பை மீறி செயல்பட முடியாது என்பதை நன்கு அறிவர். இருப்பினும், இந்த வழக்கில், 36 வயதான ஒரு அப்பாவியை, லத்தியால் கடுமையாக தாக்கி உள்ளனர். இதில், உடல் முழுதும் ஏற்பட்ட காயத்தால், அவர் உயிரிழந்துள்ளார். இதை கருத்தில் வைத்து, அவர்களுக்கு எவ்வித கருணையும் காட்ட முடியாது. எனவே, வழக்கு விசாரணையின்போது உயிரிழந்த ஏட்டுகள் வின்சென்ட், ஏழுமலை ஆகியோர் மீதான வழக்கு கைவிடப்படுகிறது. குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பு நிரூபித்து உள்ளது. எனவே, குற்றம் சாட்டப்பட்ட எஸ்.ஐ., ஆறுமுகம், போலீசார் மனோகரன், ஹரிஹர சுப்பிரமணியன் ஆகியோருக்கு, கொலை குற்றச்சாட்டின் கீழ், ஆயுள் தண்டனையும், தலா 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.