புதிய பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர்கள் இல்லாத அவலம்
சென்னை,'மாநில கல்லுாரியில் புதிதாக துவங்கப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை' என, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை:சென்னை மாநிலக்கல்லுாரியில், 44 புதிய பாடப் பிரிவுகளை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த பாடப்பிரிவுகளை நடத்த போதிய ஆசிரியர்கள் இல்லை.இதனால், சைதாப்பேட்டை திறந்தநிலை பல்கலை உதவி பேராசிரியர்கள் ஏழு பேரை, மாநிலக் கல்லுாரியில் கூடுதல் பணியாற்ற, கல்லுாரி கல்வி ஆணையர் ஆணையிட்டுள்ளார். இதை கண்டித்து, திறந்த நிலை பல்கலை உதவிப் பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு கல்லுாரிகளிலும் காலியாக உள்ள, 9,000த்திற்கும் மேலான உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதேநேரம், நுாற்றுக்கணக்கான புதிய பாடப்பிரிவுகளை துவங்கி விட்டதாக தி.மு.க., அரசு பெருமை பேசுகிறது. ஆசிரியர்களும், கட்டமைப்பும் இல்லாமல், பள்ளிக் கட்டடங்களில் கல்லுாரிகளை துவங்குவது, வகுப்பறைகள்கூட இல்லாமல் புதிய பாடப்பிரிவுகளைத் துவங்குவது என, வெறுங்கையால் முழம் போடும் நாடகங்களை தி.மு.க., அரசு நடத்தி வருகிறது.இத்தகைய நாடகங்களால் மக்களையும், மாணவர்களையும் நீண்ட நாள் ஏமாற்ற முடியாது. அரசு கல்லுாரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.