மதுக்கூட பார்க்கிங் ஆக மாறிய ஏரிக்கரை இடம் மீட்பு
ஆவடி, ஆவடி அருகே, மதுக்கூட 'பார்க்கிங்' ஆக மாறிய, ஒன்பது கோடி ரூபாய் அரசு இடம் மீட்கப்பட்டது. அயப்பாக்கம் -- திருவேற்காடு பிரதான சாலையில், ஒன்பது கோடி ரூபாய் மதிப்பிலான 15,000 சதுர அடி கொண்ட ஏரிக்கரை பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள், கடந்தாண்டு நவம்பர் மாதம் அகற்றப்பட்டு, அந்த இடம் வருவாய்த்துறையால் மீட்கப்பட்டது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடத்தில் மணலை கொட்டி, அப்பகுதியில் உள்ள மதுபான கூடம் சார்பில், மதுபிரியர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏதுவாக 'பார்க்கிங்' ஆக மாற்றிவிட்டனர். இது குறித்து, திருவள்ளூர் கலெக்டர், ஆவடி தாசில்தார் உள்ளிட்டோரிடம் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து, நம் நாளிதழில் கடந்த 31ம் தேதி, புகைப்படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, வருவாய் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள், நேற்று ஆக்கிரமிப்பு இடத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். வாகனங்கள் நிறுத்த முடியாத வகையில், பொக்லைன் இயந்திரத்தை கொண்டு, ஆக்கிரமிப்பு இடத்தின் நான்கு புறமும் பள்ளம் தோண்டி, ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டனர். எனினும், அந்த இடத்தை சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்படாததால், மீண்டும் அந்த இடம் ஆக்கிரமிப்பில் சிக்கும் வாய்ப்புள்ளது. எனவே, வருவாய்த்துறை அதிகாரிகள், மீ ட்கப்பட்ட இடத்தைச் சுற்றிலும் கம்பி வேலி அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.