ரயிலில் லேப்டாப் திருடி விற்பனை: 2 பேர் கைது
சென்னை, வேலுார் மாவட்டம், காட்பாடி பகுதியை சேர்ந்தவர் மஞ்சரி 27. இவர், சென்னையில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 31ம் தேதி தீபாவளி விடுமுறையில் சென்னையில் இருந்து தன் சொந்த ஊரான காட்பாடிக்கு செல்ல சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தார். பெங்களூரு செல்லும் பிருந்தாவன் விரைவு ரயிலில் முன்பதிவு பெட்டியில் ஏறினார். அங்கு உடமைகளை வைத்து விட்டு, இருக்கையில் அமர்ந்தார். திடீரென பார்த்த போது அவருடைய பையை காணவில்லை. இது குறித்து, சென்ட்ரல் ரயில்வே போலீசில் புகார் அளித்தார். 'சிசிடிவி' கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்ததில், ஒரு வாலிபர் பிருந்தாவன் விரைவு ரயிலில் இருந்து, பை ஒன்றை எடுத்துக் கொண்டு வெளியே சென்றது பதிவாகி இருந்தது.விசாரணையில் வேலுார் மாவட்டம், வண்ணியம்பாடி காதர்பேட் பகுதியை சேர்ந்த அப்சர் ஹுசைன் 30, என்பவர் பையை திருடி சென்றது தெரியவந்தது. இவர் ரயிலில் திருடும் மொபைல்போன் உள்பட பல்வேறு பொருட்களை பெரம்பூரில் மொபைல்போன் கடை நடத்தி வரும் சையத் ஹாஷிம் என்பவரிடம் விற்று வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு லேப்டாப், ஆப்பிள் ஐபேட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.