கோவில் மனை வாடகை செலுத்த இறுதி அவகாசம்
சென்னை, அரும்பாக்கம், பிடாரி உத்தநாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம், கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ளது.அதை, வணிக மனைகளாக மாற்றி ஸ்ரீநிவாஸ், ரத்தினம், புஷ்பரதி ஆகியோருக்கு, ஆறு மனைகள் வாடகைக்கு விடப்பட்டிருந்தன.வாடகைதாரர்கள், பல ஆண்டுகளாக வாடகை பாக்கி வைத்திருந்தனர்.இதையடுத்து, அறநிலையத்துறை சட்டப்பிரிவு - 78ன் கீழ், வாடகைதாரர்களை வெளியேற்ற சென்னை மண்டல இணைக் கமிஷனர் உத்தரவு பிறப்பித்தார்.வாடகைதாரர்கள், மேல் முறையீடாக கமிஷனர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதிலும், அவர்களை மனையிலிருந்து வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, வாடகைதாரர்கள் வரும் அக்.,14ம் தேதிக்குள் ஒரு கோடி ரூபாயும், அக்., 21ம் தேதிக்குள் ஒரு கோடி ரூபாயும் என, இரண்டு கோடி ரூபாய் கட்ட வேண்டும் என, இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.அந்த தொகையை கட்டத்தவறினால், அக்., 22ம் தேதி சீல் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ள, கோவில் செயல் அலுவலருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.