முதியவரின் நிலத்தை அபகரித்து மிரட்டல் நிலத்தரகர் சங்க தலைவர் கைது
மதுரவாயல்,: முதியவர் நிலத்தை அபகரித்து, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், ரியல் எஸ்டேட் நிலத்தரகர் சங்க மாநில தலைவர் வி.என்.கண்ணனை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, பாலவாக்கம், அண்ணா சாலையைச் சேர்ந்தவர் குமரேசன், 73; கட்டட பொறியாளர். இவர், மதுரவாயல், ராஜலட்சுமி நகரில் 1992ல் நிலம் வாங்கினார்.கடந்த 2022ல், தான் வாங்கிய இடத்தை சுத்தம் செய்ய சென்றபோது, மற்றொரு நபர், அவருடைய இடம் என அதை அபகரிக்க முயன்றதால், இது குறித்து, நில அபகரிப்பு பிரிவில் குமரேசன் புகார் அளித்தார்.இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுபடி, போலீஸ் பாதுகாப்புடன், சம்பந்தப்பட்ட இடத்தை மீட்டார். மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாமல் இருக்க சுற்றுச்சுவர், இரும்பு கேட் அமைத்து, பூட்டு போட்டார். இந்நிலையில், கடந்த ஜன., மாதம், அந்த இடத்தை பார்க்க சென்றார்.அப்போது, விருகம்பாக்கம் தொகுதி முன்னாள் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ரவியின் தம்பியும், நிலத்தரகர் சங்க மாநில தலைவருமான கண்ணன், குமரேசன் இடத்தில் மேலும் ஒரு பூட்டு போட்டு, இடத்தினுள் அவரை செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.இதையடுத்து, தன் இடத்தை ஆக்கிரமித்ததோடு, தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக, மதுரவாயல் காவல் நிலையத்தில், கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குமரேசன் புகார் அளித்தார்.இதன் அடிப்படையில் மதுரவாயல் போலீசார், கண்ணன், பூங்காவனம், 45, நளினி, வனிதா உள்ளிட்ட 10 பேர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ், கடந்த மாதம் வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கில், தலைமறைவாக இருந்த, கண்ணனை, மதுரவாயல் போலீசார் நேற்று கைது செய்தனர். இதையறிந்த கண்ணனின் ஆதரவாளர்கள், காவல் நிலையம் முன் நேற்று மாலை திரண்டனர்.விசாரணை முடிந்து, கண்ணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் வேனில் அழைத்துச் சென்றபோது, சங்க நிர்வாகிகள் வேனை செல்ல விடாமல் தடுத்து, வாக்குவாதம் செய்தனர்.போலீசார் அவர்களை விரட்டியடித்த பின், நீதிமன்றத்திற்கு கண்ணன் அழைத்து செல்லப்பட்டார்.